மின்னல் வேகத்தில் வந்த பைக்; தூக்கி வீசப்பட்ட கர்ப்பிணி காவலர் பலி: சிசிடிவியால் சிக்கிய 19 வயது வாலிபர்!

பலியான பெண் காவலர் உஷா
பலியான பெண் காவலர் உஷா

குமரிமாவட்டம், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக இருக்கும் உஷா சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரை மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கண்டுபிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கூலித்தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி உஷா(38). இவர் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக இருந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் காவல் நிலையத்தில் பணிமுடிந்து கட்டைக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பைக்கை தன் வீட்டை நோக்கி சாலையைக் கடக்கத் திருப்பினார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த பைக் ஒன்று உஷாவின் டூவீலரில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் உஷா தூக்கி வீசப்பட்டார். கர்ப்பிணியான உஷாவின் தலை, கால் பகுதிகளில் பலத்தக் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகாமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காவலர் உஷா சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உஷா பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதில் அடையாளம் தெரியாத வாகனத்தை ஓட்டியது யார்? என போலீஸார் தீவிரமாகச் சோதனை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்தனர். இதில் காவலர் உஷா மீது டூவிலரை மோதிவிட்டு நிற்காமல் சென்றது முட்டைக்காடு ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்த சஞ்சய்(19) என்பது தெரியவந்தது. 19 வயதே ஆகும் சஞ்சய் விலை உயர்ந்த அதிக சிசி கொண்ட பைக்கில் மின்னல் வேகத்தில் வந்தது அதில் பதிவாகி இருந்தது. சஞ்சய் மீது அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in