அனைவருக்கும் ஆர்டிபிசிஆர்: உ.பி அரசுக்கு சவாலாகும் பிரயாக்ராஜ் மகரமேளா!

எப்படிச் சமாளிக்கப் போகிறார் முதல்வர் யோகி?
அனைவருக்கும் ஆர்டிபிசிஆர்: உ.பி அரசுக்கு சவாலாகும் பிரயாக்ராஜ் மகரமேளா!
புனித நீராடும் சாதுக்கள்

கரோனா 3-வது அலையடிக்கும் நிலையில், பிரயாக்ராஜில் தொடங்கும் மகரமேளா நிகழ்வு உத்தரப் பிரதேச அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனையை கட்டாயமாக்கி உள்ளார் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உபியின் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் (தை மாதம் முதல் நாள்) மகரமேளா தொடங்குகிறது. இந்த ஆண்டு ஜன.14 அல்லது 15-ல் மகர சங்கராந்தி அன்று தொடங்க உள்ளது. பவுசபூர்ணிமா நாளன்று அங்குள்ள திரிவேணி சங்கமத்தில், நாடு முழுவதிலுமிருந்து பல லட்சம் பக்தர்கள் புனிதக் குளியலுக்காக வருவது வழக்கம். இதைமுன்னிட்டு நாட்டிலுள்ள பல்வேறு வகை சாதுக்களும் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தின் கரைகளில் முகாமிடுவார்கள்.

கடந்த ஆண்டு, பிரயாக்ராஜின் மகரமேளா மற்றும் ஹரித்துவாரின் கும்பமேளாவிலும் சாதுக்கள் உள்ளிட்ட பல லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் திரண்டனர். இதனால், அவர்களும் கரோனா பரவலுக்கு காரணமானதாகப் புகார் எழுந்தது. இச்சூழலில் மீண்டும் இந்த ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் மகரமேளாவில், பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஆளும் பாஜக அரசுக்கு பெரும்சவாலாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக, சாதுக்களில் ஒருவரான உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மகரமேளா வருவோர் அனைவருக்கும் 48 மணி நேரத்துக்கு முன்பாக, ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், மகரமேளா வரும் சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்து தரும்படியும் அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். மகரமேளாவில் நிர்வாகப் பணிகளுக்காக முதல்முறையாக முதல்வர் யோகியால், மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உபியின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஷேஷ்மணி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக, திரிவேணி சங்கமத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு துணை ஆட்சியர் தலைமையில் நிர்வாகப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதுக்கள்...
சாதுக்கள்...

வட மாநிலங்களின் முக்கிய நதியான கங்கையானது உபி மாநிலத்தில் அதிகமான பகுதிகளில் பாய்கிறது. புனித நதியாக கருதப்படும் கங்கை, பிரயாக்ராஜில் வந்து கலக்கிறது. இத்துடன் உபியில் ஓடும் மற்றொரு நதியான யமுனையும் கலக்கிறது. மூன்றாவதாக மண்ணுக்கு அடியில் மறைந்து ஓடும் நதியாகக் கருதப்படும் சரஸ்வதியும் பிரயாக்ராஜில் வந்து கலப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதனால், திரிவேணி சங்கமம் என்றழைக்கப்படும் இப்பகுதியில், பல நூற்றண்டுகளாக மகரமேளா மற்றும் கும்பமேளாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்த சமயங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் பலவகையான சாதுக்கள் தங்கள் சீடர்களுடன் திரிவேணி சங்கமத்தில் வந்து கல்பவாசிகளாக முகாமிட்டுத் தங்குவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

கரோனா பரவல் காரணமாக ஆளும் பாஜக அரசு இந்த ஆண்டு கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. அதேநேரம், இன்னும் ஒரு சில மாதங்களில் உபி சட்டப்பேரவைக்கு தேர்தல் வரவிருப்பதால் சாதுக்களின் சாபங்களுக்கு ஆளாகாமல் கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதும் உபி அரசுக்கு சவாலான காரியம் தான்!

Related Stories

No stories found.