ஒரே மேடையில் மம்தா, பிரசாந்த், அபிஷேக்: முடிவுக்கு வந்ததா பிணக்கு?

ஒரே மேடையில் மம்தா, பிரசாந்த், அபிஷேக்: முடிவுக்கு வந்ததா பிணக்கு?

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், ஐ-பேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையில் முரண்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் தோன்றியது எதிர்மறை ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. அது மட்டுமல்ல, இருவருக்கும் இடையில் கசப்புகள் தோன்றக் காரணமாக இருந்தவர் எனக் கருதப்படும் அபிஷேக் பானர்ஜியும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். அத்துடன், சுப்ரதா பக்சி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

முரண்கள்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு வியூகம் அமைத்துத் தந்த ஐ-பேக் நிறுவனம், கோவா தேர்தலிலும் அக்கட்சிக்காகப் பணிபுரிந்தது. எனினும், பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் பிரசாந்த் கிஷோருக்கும் மம்தாவுக்கும் இடையில் முரண்கள் தோன்றியதாகச் செய்திகள் வெளியாகின.

மம்தாவின் மருமகனான அபிஷேக், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களை ஓரங்கட்டுவதாகவும், அதற்கு வழிகாட்டுவது பிரசாந்த் கிஷோர்தான் என்றும் சொல்லப்பட்டது. பிரசாந்தின் யோசனைப்படிதான், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்று அபிஷேக் பானர்ஜி பேச ஆரம்பித்தார் என்றும் புகார்கள் எழுந்தன.

கட்சியின் மூத்த தலைவரான சந்திரிமா பட்டாச்சார்யாவின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்துவரும் ஐ-பேக் குழுவினர், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என அபிஷேக் முன்னெடுக்கும் வழிமுறையை ஆதரிக்கும் விதத்தில் ட்வீட் செய்தது சந்திரிமாவை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதுகுறித்து அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஐ-பேக் மறுத்தது.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழு தங்கள் கட்சி வேட்பாளர்களைக் கைவிட்டுவிட்டதாக அம்மாநில திரிணமூல் காங்கிரஸ் தலைவர் கிரண் கண்டோல்கர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஊடக ஒருங்கிணைப்புக் குழு

இந்தச் சூழலில், கடந்த மாதம் கட்சியின் தேசிய செயற் குழுவை முற்றிலுமாக மாற்றியமைத்த மம்தா பானர்ஜி, ஊடக ஒருங்கிணைப்புக் குழு எனும் பெயரில் ஒரு புதிய குழுவையும் உருவாக்கினார். மேற்கு வங்க அமைச்சர்கள் அரூப் பிஸ்வாஸ், சந்திரிமா பட்டாச்சார்யா முன்னாள் எம்.பி குணால் கோஷ் ஆகியோரின் தலைமையில் அக்குழு இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர், கட்சியின் ஊடக ஒருங்கிணைப்புப் பணிகளை ஐ-பேக் நிறுவனம்தான் கவனித்துவந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு, திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கும் இளம் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேற்றுமைகளைக் களையும் பணியில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டது.

கட்சியின் மாநிலத் தலைவராக சுப்ரதா பக்சியும், பொதுச் செயலாளராக பார்த்தா சாட்டர்ஜியும் தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அதேசமயம், அபிஷேக் பானர்ஜி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பதவியில் நீட்டிக்கப்பட்டார்.

பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால், இனி திரிணமூல் காங்கிரஸுடனான பிரசாந்த் கிஷோரின் உறவு தொடருமா, முறியுமா எனும் விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், மம்தா, அபிஷேக், பிரசாந்த் என மூவரும் ஒரே மேடையில் தோன்றியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in