‘நிதீஷுடன் இணைந்து பணியாற்றத் தயார்... ஆனால் ஒரே ஒரு நிபந்தனை!’

புதிர் போடும் பிரசாந்த் கிஷோர்
‘நிதீஷுடன் இணைந்து பணியாற்றத் தயார்... ஆனால் ஒரே ஒரு நிபந்தனை!’

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார். இந்நிலையில், அவருக்கு ஆதரவான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கடந்த மாதம் வெளியேறிய நிதீஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார். தற்போது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்தச் சூழலில், நிதீஷ் குமாருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று கூறியிருக்கும் பிரசாந்த் கிஷோர் அதற்கு ஒரு முக்கியமான நிபந்தனையையும் முன்வைத்திருக்கிறார்.

பிஹாரில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே அவருடன் மீண்டும் இணைவது குறித்தோ கூட்டணி அமைப்பது குறித்தோ பரிசீலிக்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் தன்னைச் சந்தித்ததாக நிதீஷ் குமார் கூறியிருக்கிறார். “அது ஒரு சாதாரண சந்திப்புதான். பெரிதாகச் சொல்ல அதில் எதுவும் இல்லை. முன்னாள் எம்.பி பவன் வர்மா தான் பிரசாந்த் கிஷோரை அழைத்துவந்தார். அவர் இதற்கு முன்னரும் என்னை வந்து சந்தித்தார்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்துகொண்டே ஐக்கிய ஜனதா தளத்தில் அங்கம் வகித்த பிரசாந்த் கிஷோர், கட்சித் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது விமர்சித்துவந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நிதீஷ் குமார் ஆதரவளித்ததைக் கடுமையாக விமர்சித்ததற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து 2020-ல் அவர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in