
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை வைத்து பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு வரும் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிராங்க்ஸ்டர் ராகுல் என்ற யூடியூப் சேனல் மூலமாக ஆயிரக்கணக்கான பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர் ராகுல். பிராங்க் வீடியோக்களை வெளியிடுவது மூலமாக பிரபலமான ராகுலுக்கு சிவகுமாரின் சபதம், பேச்சுலர் உள்ளிட்ட பல சினிமா படங்களில் துணை நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில் ராகுலின் பிராங்க் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் துணிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, அவர்களிடம் ரவுடியை போல் அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த பிராங்க் வீடியோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை கொண்டு மிரட்டும் தொனியில் அமைந்துள்ளதாக ரோஹித்குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோஹித்குமார், "பிராங்க்ஸ்டர் ராகுல் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலில், ராகுல் என்பவர் முதியவர்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை கொண்டு மிரட்டுகிறார். இதனால் அந்த முதியவருக்கு ஏதேனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது. வெறும் பாலோயர்கள் மற்றும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஆயுதங்களை கொண்டு முதியவர்களை மிரட்டும் தொனியில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்ட ராகுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலை தடை செய்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்" என்றார்.