பி.ஆர்.பாண்டியனை வழிமறித்து கைது செய்தது போலீஸ்: போராட்டத்திற்குச் சென்றபோது அதிரடி

காலை வழி மறித்து கைது செய்யும் போலீஸார்
காலை வழி மறித்து கைது செய்யும் போலீஸார்

தமிழக அனைத்து விவசாயிகள்  சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பிஆர்.பாண்டியனை செங்கல்பட்டு அருகே தொழுப்பேடு சுங்கச்சாவடியில் வழிமறித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பரந்தூரில்  விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக இன்று ஏகனாபுரம்  கிராமத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும்  உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை துவக்கி வைக்க விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியன் அழைக்கப்பட்டு இருந்தார். 

அதற்காக இன்று காலை திருவாரூர் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி தனது காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.  செங்கல்பட்டு மாவட்ட எல்லையான தொழுப்பேடு சுங்கச்சாவடியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் வாகனச்சோதனை நடத்தி காரில் வந்த  பி.ஆர்.பாண்டியனை வழிமறித்து  கைது செய்தனர். அவரை  பெருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

இது விவசாயிகள் குரவளையை நெரிக்கும்  செயல், தமிழக முதல்வர் விவசாயிகள் விரோத போக்கை கைவிட வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள பி ஆர் பாண்டியனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள் சங்கத்தினர் அவரை கைது செய்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் கடுமையான கண்டனங்களைத்   தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in