`இழப்பீடுத் தொகை குறித்து அறிவிக்க மறுப்பது ஏன்?'-முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி

முதலைமேடு திட்டு கிராமத்தில் பி.ஆர். பாண்டியன்
முதலைமேடு திட்டு கிராமத்தில் பி.ஆர். பாண்டியன்

கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள காவிரியின் உபரி நீரால் வீணாகியுள்ள விளைநிலங்களுக்கு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் திறந்து விடப்படும் கர்நாடகத்தின் உபரி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதனால் மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள மக்கள் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காவிரியில் இதுவரையிலும் இல்லாத வகையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல், வாழை, சோளம், பருத்தி, காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட பணப்பயிர்களும் பூ உள்ளிட்ட தோட்ட பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த பாதிப்பு குறித்து இதுவரையிலும் கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுப்பது குறித்தான எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக முதலமைச்சர் அறிவிக்க மறுப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில்
கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில்

இரண்டு ஆண்டுகளாக குருவை காப்பீடு செய்வதை தமிழக அரசு கைவிட்டுவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு பொறுப்பு ஏற்று நிவாரணம் அறிவிக்க வேண்டும்.

நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் ஆகிய 3 கிராமங்களில் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களை மீட்டெடுக்க கிராமத்தின் அருகே மேடான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டி அவர்களை நிரந்தரமாக குடியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு ஓட்டு வீடுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், குடிசை வீடுகளுக்கு ரூபாய் 25,000 -ம் நிதி உதவி வழங்கிட வேண்டும். இந்த கிராமங்களை மையமாக வைத்து புயல் வெள்ள பேரிடர் பாதுகாப்பு மண்டபங்களை உடன் அமைத்திட வேண்டும்.

கொள்ளிடம் பாலம் முதல் கடல் முகத்துவாரம் வரையிலும் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட் சுவர்கள் அமைத்து வெள்ளநீர் உடைத்துக்கொண்டு வெளியேறுவதை தடுக்க முன்வர வேண்டும். மேலும் வெள்ளைமணல் கதவணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து கல்லணை வரையிலும் ஏழு கிலோ மீட்டருக்கு ஒன்றாக கதவணைகள் அமைத்து நிலத்தடி நீரை பராமரிக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். பாசன ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை விதித்திட வேண்டும்.

உபரி நீர் கடலுக்குச் சென்று வீணாவதை தடுக்கும் விதமாக காவிரியில் ராசி மணலில் அணை கட்டுவது ஒன்றுதான் தீர்வாக இருக்கும். அதன்மூலம் 64 டிஎம்சி தண்ணீரையாவது தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். அதற்கு மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, கர்நாடக அரசிடம் ஒத்த கருத்தை உருவாக்கி அணை கட்டுமான நடவடிக்கையை தொடங்க காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in