செறிவூட்டப்பட்ட அரிசி விவசாயிகள் நலனுக்கு எதிரானது; கார்ப்பரேட் மயமாகிறதா தமிழக அரசு? - பிஆர்.பாண்டியன் கேள்வி

செறிவூட்டப்பட்ட அரிசி விவசாயிகள் நலனுக்கு எதிரானது; கார்ப்பரேட் மயமாகிறதா தமிழக அரசு? - பிஆர்.பாண்டியன் கேள்வி

பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக அறிவித்திருப்பதன் மூலம் அரிசியும்  கார்ப்பரேட் மயமாகிவிட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டிருப்பதாக பி.ஆர்.பாண்டியன் கவலை தெரிவித்துள்ளார். 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்  தஞ்சாவூரில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது.,  

"கல்லணைக்கு உலகளாவிய சிறந்த அணை என்கிற விருது கிடைத்துள்ளமைக்கு வாழ்த்துகளையும்,  பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு தமிழக அரசு யுனெஸ்கோ விருது பெற முயற்சிக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்போடு வெல்லமும்,  கரும்பும் இணைத்து வழங்க வேண்டும் என்ற  விவசாயிகள் கோரிக்கைக்கு  மதிப்பளித்து கரும்பு வழங்க முன்வர வேண்டும் என தமிழக முதல்வரை  வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் என அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 2023 ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துவிட்டு, தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பிரதமர்கள் பல நாடுகளுடைய தலைவர்கள் தமிழகத்தின் சிறுதானிய மற்றும்  பாரம்பரிய வேளாண் உணவு உற்பத்தி பொருட்கள்தான் மருத்துவ குணம் கொண்டது,  கரோனாவை எதிர்க்கவல்லது என பறைசாற்றி வரும் நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு என்கிற பெயரில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்வது தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிரானது, ஒட்டுமொத்த தமிழக விவசாயத்தையும்  குழிதோண்டி புதைக்கும் செயலாகும். 

தமிழக அரசின் சட்டங்களும் திட்டங்களும் கார்ப்பரேட் மயமாகிறதோ? என்கிற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.  எனவே செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை  கைவிட முதலமைச்சர் விரைந்து உரிய தீர்வு காண முன்வர வேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in