
இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
அண்மை காலமாக உலக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. துருக்கி, சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 45 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அடுத்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில் தொடரும் நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் டொபெலோ பகுதிக்கு வடக்கே 177 கிலோ மீட்டர் தூரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர். பாதிப்பு குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து காணப்படுகின்றனர்.