மின்துறை தனியார்மயத்திற்கு எதிராக வேலைநிறுத்தம்: இருளில் மூழ்கிய காரைக்கால்

வரிச்சுக்குடியில் நடைபெற்ற சாலை மறியல்
வரிச்சுக்குடியில் நடைபெற்ற சாலை மறியல்

புதுச்சேரி மாநிலத்தில் மின் துறை ஊழியர்களின்  வேலை நிறுத்தத்தால் காரைக்கால் மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் இருளில் மூழ்கியது. பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கானப் பணிகளை துவக்கி உள்ளது.  அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலத்தில் மின் துறையை  தனியார் மயமாக்குவதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு அம்மாநிலத்தில் உள்ள மின்துறை ஊழியர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த  நிலையில் நேற்று முன்தினம்  தனியார் மயத்திற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனை  எதிர்த்து நேற்று முதல் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பணிக்கு வராததால் நேற்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் பராமரிப்பு மற்றும் மின்  கட்டண வசூல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை அருகிலிருக்கும்  காரைக்கால் மாவட்டத்திலும் தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் நேற்று முன்தினம் மின் சேவை பாதிக்கப்பட்டது. அதனை சரி செய்வதற்கு ஊழியர்கள் நேற்று பணிக்கு வராததால் நேற்று முன்தினம் இரவில் இருந்து காரைக்கால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடை பட்டிருந்தது. அந்த நிலையே நேற்று இரவும் தொடர்ந்தது. இதனால் குடிநீர் வழங்கும் பணி உட்பட பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டன. 

மின்சாரம் இல்லாததால் வீடுகளில் மின் மோட்டார், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இயக்க முடியாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். காரைக்கால் நகரம் உட்பட மேலும் பல இடங்களில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது.  இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வரிச்சிக்குடி,திருநள்ளாறு உள்ளிட்ட பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சிதம்பரம், நாகப்பட்டினம், காரைக்கால், கும்பகோணம் உள்ளிட்ட தடங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அதனையடுத்து  போலீஸார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சு நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர். ஆனாலும் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் காரைக்கால் பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இதே நிலை இன்றும்  தொடர்ந்தால் காரைக்கால் பகுதியில் பொது அமைதி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in