இரவில் ஒரே மேடையில் திருமணம்: திடீர் மின்தடையால் மணமகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இரவில் ஒரே மேடையில் திருமணம்: திடீர் மின்தடையால் மணமகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஒரே மேடையில் திருமணம் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் மணமகள்கள் மாறினர். மணமகன் வீட்டிற்கு மணப்பெண் சென்று முக்காடை அகற்றியபோதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரை சேர்ந்தவர் ரமேஷ் லால். இவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, மகள்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார் தந்தை ரமேஷ். அதன்படி, மகள்களுக்கு மணமகன்கள் கிடைத்த நிலையில், திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் ரமேஷ். கடந்த 5-ம் தேதி இரவில் மகள்களுக்கு ஒரே மேடையில் திருமண சங்கு நடைபெற்றது.

அப்போது, மணப்பெண்கள் தலையில் முக்காடு போட்டு மூடி இருந்தனர். அதோடு இரண்டு பேரும் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்திருந்தனர். திருமண சடங்கு முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்த போது திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது, மணப்பெண்கள் மாறிவிட்டனர். அக்னியை சுற்றி வரும்போது கூட பண்டிதரும் இதனை கவனிக்காமல் மணப்பெண்களை மாற்றி சுற்றி வரும் படி செய்துவிட்டார்.

திருமணம் முடிந்து இரு பெண்களும் தங்களது கணவன் வீட்டிற்கு சென்றனர். அங்கு சென்ற பிறகுதான் தாங்கள் போட்டு இருந்த முக்காடை அகற்றினர் மணப்பெண்கள். முக்காடை அகற்றியதும் மணமகன்கள் அதிர்ச்சியடைந்தனர். நான் இந்த பெண்ணை பார்க்கவே இல்லையே என்று மணமகன்கள் கூறி பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மின் தடையால் மணப்பெண்கள் மாறி விட்டதாக பெண் வீட்டார் மணமகன்களை சமாதானப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்களை மணமகன்கள் அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in