பதஞ்சலி ‘ஜூம்’ சந்திப்பில் பலான படம்

பதஞ்சலி ‘ஜூம்’ சந்திப்பில் பலான படம்

உத்தராகண்ட் மாநிலத்தில் பதஞ்சலி யோகபீடம் ஏற்பாடு செய்திருந்த ’ஜூம்’ சந்திப்பில் திடீரென ஆபாச படம் ஓடியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற பதஞ்சலி நிறுவனத்தின் யோகபீடம் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென பதஞ்சலியின் சுகாதார ஆய்வு மையங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. அப்படி ஹரித்துவார் மாவட்டம் பஹத்ராபாத்தில், பதஞ்சலி சுகாதார ஆய்வு மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பதஞ்சலி யோகபீடம் ஏற்பாடு செய்திருந்த இணையவழி சந்திப்பு ஒன்றினை இந்த ஆய்வு மையம் ஒருங்கிணைத்து வந்தது.

சர்வதேச அளவிலான இந்த இணைய வழி சந்திப்பில் பதஞ்சலி யோகபீடம் முன்னெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள், பயன்பாடுகள் தொடர்பான விவாதங்கள் மற்றும் வகுப்புகள் நடைபெற்று வந்தன. பெண்களையும் உள்ளடக்கிய இந்த ஆன்லைன் சந்திப்பில் திடீரென ஆபாச படம் ஓட ஆரம்பித்தது. ஜூம் சந்திப்பில் பங்கேற்ற எவரோ அதனை வலையேற்றி ஒளிபரப்பு செய்ததும் தெரிய வந்தது. உடனடியாக ஜூம் சந்திப்பு முடித்து வைக்கப்பட்ட போதும், பதஞ்சலி அமைப்பை சார்ந்தவர்களுக்கு இதில் பிரச்சினை எழுந்தது. பதஞ்சலி யோக பீடத்தின் சார்பில் இந்த ஆபாச படம் ஒளிபரப்பானதே இதற்கு காரணம்.

இதனையடுத்து, பதஞ்சலில் யோகபீட அமைப்பின் நிர்வாகிகள் பஹத்ராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஏராளமானோர் பங்கேற்ற சர்வதேச அளவிலான இணைய வழி சந்திப்பு என்பதால், உத்தராகண்ட் சைபர் போலீஸ் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முடிவில், மகாராஷ்டிர மாநிலம் புனே அருகிலுள்ள எரவாடாவிலிருந்து ஆகாஷ் என்ற இளைஞர் பிடிபட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்திருக்கும் போலீஸார், ஆகாஷை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஜூம் இணைய வழி சந்திப்பில், பதஞ்சலி யோகபீடம் சார்பில் ஆபாச படம் ஒளிபரப்பானதும், அதனால் சந்திப்பில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியடைந்ததும், ஆன்லைன் அனுகூலங்களின் மறுபக்கத்தை காட்டியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in