
கன்னியாகுமரி பாதிரியாரின் லேப்டாப்பில் சென்னை பெண்கள் உட்பட 80 பேரின் ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளதால் அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்தபாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ட்ரோ (29). அழகிய மண்டபம் அருகே பிலாங்கலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், பாதிரியார் பெனடிக் ஆன்ட்ரோ மீது நர்சிங் மாணவி ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள், வாட்ஸ் அப் சாட்டிங் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின. இதனால், பாதிரியார் தலைமறைவானார்.
இந்நிலையில், நர்சிங் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களிடம் ஆபாசமாகவும், அவதூறாகவும் நடந்து கொள்ளுதல், சமூக வலைதளங்களைத் தவறான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கன்னியாகுமரி சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவரை கைது செய்ய ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதிரியாரிடம் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னையைச் சேர்ந்த இளம்பெண்களும் ஏமாந்துள்ளனர். சென்னையில் திருமண வீட்டிற்கு பிரார்த்தனை செய்யச் சென்ற இடத்தில் ஒரே நாளில் அங்கு ஒரு இளம்பெண்ணை பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.
தன்னுடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணுக்கு பாதிரியாரே திருமணம் செய்து வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸாரிடம் சிக்கிய பாதிரியாரின் லேப் டாப்பை ஆய்வு செய்த போது சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, பாதிரியார் ஏராளமான பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே, தற்போது தனிப்படை போலீசார் நெருங்கியதால், தலைமறைவாக உள்ள பாதிரியார் பெனடிக்ட் சரண் அடைய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில்," பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். ஆன்லைன் மூலமும் புகாரை அனுப்பி வைக்கலாம். பாதிரியாரின் ஆபாச வீடியோக்கள் எங்கிருந்து பரப்பப்பட்டு வருகிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.