`எங்களை கசக்கிப்பிழிந்தால் விற்பனையை புறக்கணிப்போம்'- தனியார் பால் நிறுவனங்களுக்கு பொன்னுசாமி எச்சரிக்கை

`எங்களை கசக்கிப்பிழிந்தால் விற்பனையை புறக்கணிப்போம்'- தனியார் பால் நிறுவனங்களுக்கு பொன்னுசாமி எச்சரிக்கை

`பால் முகவர்களை கசக்கிப்பிழியும் சர்வாதிகார போக்கினை திரும்பப் பெறாவிட்டால் பால் விற்பனையை புறக்கணிக்க நேரிடும்' என்று முன்னணி தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்வேறு தொழில்துறைகள் நொடிந்து போய் கடுமையான சிரமங்களை சந்தித்து கொண்டிருந்த வேளையில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால்வளத்துறையும் விதிவிலக்கின்றி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா நோய் பெருந்தொற்று பால்வளத்துறையை கடுமையாக ஆட்டிப்படைத்து, பால் முகவர்களுக்கு மிகுந்த சிரமங்களையும், கூடுதல் தொழில் பாதிப்புகளையும் அளித்து கடுமையான வாழ்வாதார இழப்பையும் ஏற்படுத்தியது.

தனியார்பால் நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்கள் தந்த சுதந்திரத்தால் பால்வளத்துறையில் தனியார் பால் நிறுவனங்களின் சர்வாதிகார போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்று பால் விற்பனை விலையேற்றம், பால் முகவர்களுக்கான ஊக்கத்தொகை ரத்து போன்ற செயல்பாடுகளால் பால் முகவர்கள் நித்தமும் பல இன்னல்களையும், சொல்லெனா துயரையும் சந்தித்து வருகின்றனர். அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த ஹெரிடேஜ் மற்றும் பன்னாட்டு நிறுவனமான திருமலா உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு விரோதமாக நித்தமும் ஒரு திட்டத்தை கொண்டு வந்து பால் முகவர்களை வாட்டி, வதைப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் மேற்கண்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்களிடம் பால் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யும் பால் முகவர்கள் அந்தந்த நிறுவனங்களின் இணைய செயலிகள் (App) மூலம் மட்டுமே பால் கொள்முதலுக்கான பணத்தை செலுத்த வேண்டும், அவ்வாறு செலுத்தாவிட்டால் ரொக்க பரிவர்த்தனைக்கு என கூடுதலாக சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறி பால் முகவர்களின் வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை பிடித்தம் செய்து பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி வந்தன.

இந்த நிலையில் வருகின்ற 2023 புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு புத்தாண்டு பரிசாக ஹெரிடேஜ் நிறுவனம் ஜனவரி 1-ம் தேதி முதல் தங்களது பால் முகவர்கள் அனைவரும் இணைய செயலி மூலம் மட்டுமே பால் கொள்முதலுக்கான பணத்தை செலுத்த வேண்டும், ரொக்க பரிவர்த்தனை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்திருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் சர்வாதிகார போக்கினை உடனடியாக கைவிட்டு பழைய நடைமுறையையே கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும் பால் முகவர்கள் சில்லறை வணிக நிறுவனங்கள், தேனீர் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலக கேன்டீன்களுக்கு அதிகாலையில் பாலினை விநியோகம் செய்து, பின்னர் அந்த பாலுக்குரிய தொகையை வசூலிப்பது மற்றும் காலி பால் டப்புகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மாலை 5 மணிக்கு மேல் தொடங்கி இரவு 10 மணி வரை செய்து வரும் நேரத்தில் மறுநாள் அதிகாலையில் பால் கொள்முதல் செய்யும் போது செலுத்த வேண்டிய தொகைக்காக அதன் பிறகு வங்கிகளுக்கு சென்று பணம் செலுத்தி அதன் மூலம் இணைய செயலிகள் மூலம் செலுத்துவது என்பது சற்றும் இயலாத காரியமாகும்.

அதுமட்டுமின்றி பால் முகவர்களிடம் பால் வாங்கும் பெரும்பாலான சில்லறை வணிகர்கள் அதற்குரிய தொகையை 10, 20, 50, 100, 200 ரூபாய் தாள்களாகவும், 1, 2, 5, 10 ரூபாய் நாணயங்களாகவும் வழங்கும் போது அதை பெற்று இரவு நேரத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் செலுத்துவதோ அல்லது மறுநாள் வங்கியில் செலுத்துவதோ நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கும் போது அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாததாகும் அத்துடன் இந்த நடைமுறையால் பால் முகவர்கள் சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வெளிநபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடுவதோடு அதன் மூலம் தங்களின் வருவாயையும் இழக்க நேரிடும்.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி

எனவே இணைய செயலிகள் மூலம் மட்டுமே பால் கொள்முதலுக்கான பணத்தை செலுத்த வேண்டும் என்கிற உத்தரவை சம்பந்தப்பட்ட தனியார் பால் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், வேண்டுமானால் ரொக்க பரிவர்த்தனையோடு அந்த நடைமுறையையும் இணைத்து செயல்படுத்தலாம் எனவும், அவ்வாறு இணைய வழி செயலி மூலம் பணம் செலுத்தும் பால் முகவர்களின் வங்கி பரிவர்த்தனைக்கான கூடுதல் கட்டணத்தை ஈடுசெய்ய அதற்குரிய தொகையை சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதோடு, அந்த செயல்பாட்டிற்காக சிறப்பு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும்.

எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் பால் முகவர்களை கசக்கிப்பிழியும் வகையில் இணைய செயலிகள் மூலம் மட்டுமே பால் கொள்முதலுக்கான பணத்தை செலுத்த வேண்டும் என்பதை பால் முகவர்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிகள் நடக்குமானால் சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களின் பால் விற்பனையை தமிழகம் முழுவதும் புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை சம்பந்தப்பட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in