'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இலவசமாக திரையிட வேண்டும்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோரிக்கை!

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இலவசமாக திரையிட வேண்டும்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்  கோரிக்கை!

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாகவும், பொதுமக்களுக்கு வரிவிலக்கு அளித்து சலுகை கட்டணத்திலும் திரையிட மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று ஓய்வற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தைச் சேர்ந்தவர்  சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சித்திரவேலு. சமூக செயல்பாட்டாளரான இவர் 'பொன்னியின்  செல்வன்' திரைப்படத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள்  அப்படத்துக்கு வரி விலக்கு அளித்தும்,  மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள திறந்த மடலில்  கூறப்பட்டுள்ளதாவது., "இன்று உலகமெங்கும் உச்சரிக்கைப்படும் ஒரே மந்திரம் "பொன்னியின் செல்வன்" என்பதாகும். கடந்த 30.09.2022 அன்று  உலகமெங்கும் 5,500 - க்கும்  மேற்பட்ட தியேட்டர்களில், தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,இந்தி என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகி வாகைசூடிவரும் திரைப்படம் இது.

தமிழனின் ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். தீரம், விவேகம், போர்த்திறன், வெற்றி வேற்கை, சாதுரியம்,  பண்பாடு, கலாச்சாரம், குணநலன்,  விகடம், ராஜதந்திரம், ஈரம், ஈவு, காதல், களிப்பு, விட்டுக்கொடுத்தல், கடவுள் பக்தி இப்படி  சரித்திர ஆசிரியர்களின் அகராதியில் இடம்பெற்றுள்ள சொற்களஞ்சியங்களுக்கும் நடைமுறை உதாரணம் ‘பொன்னியின் செல்வன்’ என்றால் அதுமிகையல்ல.

பொன்னியின் செல்வன் உலகம் அறிவேண்டிய வரலாற்று பொக்கிசம். வளரும் இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமான கருத்துக்களஞ்சியம். செல்போனில் கேம்ஸ்களில் முழ்கிக்கிடக்கும் இளைய பாரதத்தை, இளம் தலை முறையினரை மடைமாற்ற, நல்வழிப்படுத்த, நமது பாட்டனும் பூட்டனும் வாழ்ந்த வாழ்க்கையை எடுத்துச்சொல்ல, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஒரு சிறந்த வடிகாலாகும்.

வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன், குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்), பெரிய பழுவேட்டரையர், நந்தினி, சின்ன பழுவேட்டரையர், ஆதித்த கரிகாலர், சுந்தர சோழர், செம்பியன்மாதேவி, கடம்பூர் சம்புவரையர், சேந்தன் அமுதன், பூங்குழலி, வானதி, மந்திரவாதி ரவிதாஸன், கந்தமாறன் கொடும்பாளூர் வேளார், மணிமேகலை,  அநிருத்த பிரம்மராயர், மதுராந்தக சோழர், இராஜாத்தியர், கண்டராதித்தர், அரிஞ்சய சோழன்

இவை யாவும் கற்பனை கதாப்பாத்திரங்கள் அல்ல. நமக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள். முன்னோடிகள்.  காவியமாக, ஓவியமாக காலத்தால் நிலைத்து நிற்பவர்கள்.இவர்களின் வாழ்க்கை ஆயிரமாயிரம் நீதிநெறிகளை நாளும் சொல்பவை. அரசநீதி எப்படிப்பட்டது , குடிமக்கள் நீதி எப்படிப்பட்டது என்பதை அவைகள் சொல்லித் தருகின்றன.

சித்திரவேலு
சித்திரவேலு

மூவேந்தர்களின் நிலப்பகுதி, பல்லவர் நிலமான காஞ்சிபுரம், காவிரி, கொள்ளிடம், கோடியக்கரை, கோடியக்காடு, பராந்தகனின் கலங்கரை விளக்கம், இலங்கை, பழையாறு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புத்தவிகார், யானைப்படை குதிரைப்படை, படகு, கப்பல், புயல், கடல்பயணம், தூதோலை, வீராணம் என்கிற வீரநாராயணன் ஏரி இப்படியாக நாம் நேற்றும் இன்றும் சுவாசிக்கும் பூமித்தாயைப்பற்றி ஆயிரக்காணக்கான செய்திகளை சொல்கிறது. 

மொழிப் பாடமாகட்டும், கணக்கு, வரலாறு, புவியியல், சூழ்நிலையியல், சுற்றுசூழலியல் என அனைத்துப் பாடமும் இந்த ஒரு ‘பொன்னியின் செல்வனில்’ உள்ளது. ஆகவே இந்த படத்தை ஒருவர் கூட பார்க்காமல் இருக்கக்கூடாது. குறிப்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும். எனவே சனி, ஞாயிறு மாணவர்களுக்கு இலவசமாகவும், வரி விலக்கு வழங்கி சலுகை கட்டணத்தில் பொதுமக்கள் படத்தை திரையிட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்'  என்று சித்திரவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in