பொங்கல் திருநாள் கொண்டாட்டம்: அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்து செய்தி என்ன?

பொங்கல் திருநாள் கொண்டாட்டம்: அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்து செய்தி என்ன?

தமிழர் திருநாள் என அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “ அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தைப்பொங்கல்,மாட்டுப்பொங்கல் மற்றும் காணும்பொங்கல் நல்வாழ்த்துக்கள். பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப்பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாடுபட்டுவரும் உழவர்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவர். இந்நன்னாட்களில் மக்கள் அனைவரது வாழ்வில் அன்பு,அமைதி நிலவி,அவர்களுக்கு மகிழ்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வில் வளத்தையும் சேர்க்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கேற்ப, இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும், இதயங்கள் தோறும் இன்பங்கள் தங்கட்டும் என நெஞ்சார வாழ்த்தி, தமிழக மக்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் அன்போடும், மகிழ்ச்சியோடும் ஒற்றுமையாக வாழ எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நீண்டகாலமாகப் பெருமைகள் பல வாய்ந்த நம் தேசிய இனத்தின் பண்பாட்டு விழுமிய திருவிழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ‌ திகழ்கிறது. ஒரு தேசிய இனம் காலத்தின் போக்கில் வளர்ச்சி நிலை அடையும்போது அதன் பண்பாட்டு‌ தொடர்ச்சி அறுபடுகிற‌ காட்சிகளை வரலாற்றில் காண முடிகிறது. ஆனால், தமிழர் இன வரலாற்றில் இந்த இனம் தோன்றிய காலத்திலிருந்து அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி பெருவிழாவாகப் பொங்கல் திருநாள்தான் விளங்குகிறது என்பதை நம் மொழியின் பழம்பெரும் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மண் செழிக்க ஏர் செலுத்தி, உலகின் பசி தீர்க்க நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி தன் உதிரத்தால் உலகின் பசியாற்றிய முது இனம் நம் தமிழினம். உலகின் மூத்த குடி தமிழரின் ஆதி தொழிலாக உலகிற்கே உணவளிக்கும் உழவுத்தொழில் இவ்வாறாகத்தான் உருவானது. தன் உழவுக்கு உதவும் ஐந்தறிவு விலங்கான மாட்டினைக்கூட வீட்டிலுள்ள ஓர் உறவாக நினைத்து அதைப் போற்றி வணங்கி ஏறு தழுவி மாட்டுக்கொரு பொங்கலெனக் கொண்டாடித் தீர்த்தவன் தமிழன்.

அநீதிக்கு எதிராக, அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு எதிராக, சாதிமத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக, பசி, பஞ்சம், பட்டினி, வேலையின்மை, இயற்கை வள நலச்சுரண்டல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமத்துவமின்மை போன்ற கேடுகளுக்கு எதிராக உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சி பொங்கல். நாளைய பொழுது தமிழுக்கானதாய் விடியட்டும்! புலரும் புத்தாண்டு உழவர் பெருங்குடிகளுக்கானதாய் மலரட்டும்!” என தெரிவித்துள்ளார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “தமிழ்ப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள். மதசார்பில்லா மகத்தான பெருவிழா தமிழ்மக்கள் கொண்டாடும் தைப் பொங்கல் திருவிழா. சனாதனம் ஊடுவ விடாமல் தமிழர் பண்பாட்டைச் சிதைக்க விடாமல் பாதுகாப்போம். சாதியத்தை வேரறுக்கும் தமிழ்த்தேசியம் வளர்ப்போம்” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இனிய பொங்கல் நன்னாளில், எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவர் வாழ்விலும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் பெருகவும், நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கவும் பாஜகவின் சார்பில் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “ மகிழ்ச்சியான விவசாயிகளை கொண்டிருக்கும் நாடுதான் உன்னதமான தேசமாக இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும் கொண்டாடுவோம். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழினத்தின் பெருமைகளை உயர்த்திப் பிடித்திடுவோம்” என தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ தமிழர்களுக்கு, பொங்கல் பண்டிகையானது புத்தொளி பிறக்க, தமிழர்களின் வாழ்வும், தமிழ்நாடும் முன்னேற நல்வழி காட்டட்டும்.

தமிழர்களாகிய நம் பண்பாட்டை, மாண்பை,பழமையை நிலைநாட்டும் தனிப்பெரும் திருவிழாவான தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் அறிக்கையில், “ தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்ட மனநிலையில் தமிழ்நாடே ததும்பிக் கொண்டிருக்கிறது. சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண்மை அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in