பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டம் இன்று தொடக்கம்: கவரில் பணத்தை வழங்கக்கூடாது

பொங்கல் பரிசுத்தொகுப்புத் திட்டம் இன்று தொடக்கம்: கவரில் பணத்தை வழங்கக்கூடாது

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு  ரேஷன் கடைகளில் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் இடம்பெற்றுள்ள நேரத்தில் சென்று பரிசுத்தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 2.19 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, எந்த நாளில், எந்த நேரத்தில் வரவேண்டும் என்பதற்கான டோக்கன், வீடுதோறும் வழங்கப்பட்டுள்ளது.  விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  பரிசுத்தொகுப்பில் இடம்பெறும் மற்ற பொருட்களும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், சென்னை அன்னை சத்யா நகரில் இன்று தொடங்கிவைக்கிறார்.

அதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. திட்டத்தை குளறுபடிகள் இன்றி செயல்படுத்த, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கத்தை இரண்டு, 500 ரூபாய் நோட்டுக்களாக வழங்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது என அப்போது அவர்கள்  ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளனர். ரேஷன் கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு, பரிசுத் தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க, அதிகாரிகளுக்கு உணவு மற்றும் கூட்டுறவு துறைகள் வாயிலாக உத்தரவிடப்பட்டு உள்ளது. 

பரிசுத் தொகுப்பு வினியோகத்தில் ஆளும்கட்சியினர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் குறுக்கீடு செய்தால், உடனடியாக கலெக்டர்களிடம் புகார் அளிக்கும்படி, கூட்டுறவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in