இலங்கை தமிழர் முகாமில் எவ்வளவு பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு? - அமைச்சர் சக்கரபாணி பேட்டி

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி

சென்னை, கோபாலபுரம், கான்ரான்ஸ்மித் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், “குடும்ப அட்டைதாரர்கள் 2.19 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இன்று முதல் டோக்கன் வழங்கக் கூடிய பணி தொடங்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும். வருகிற ஜனவரி 9-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் 9- ம் தேதி முதல் 12- ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நியாய விலைக் கடைகளில் உங்கள் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 12- ம் தேதிக்குள் பொங்கள் பரிசுத்தொகுப்பு  பெற முடியாதவர்களுக்கும் ,வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு  ஜனவரி 13-ம் தேதியன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

பரிசு தொகுப்புக்கான பொருட்கள் மற்றும் மாதந்தோறும் வழங்கும் பொருட்கள் 60 விழுக்காடு அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் 100 சதவீத பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும். கடந்த ஆண்டு திருப்பத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தான் பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக புகார் வந்தது அதற்கு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொருட்கள்  தரமானதாக இருக்கும்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள 19,269 நபர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், அவர்களிடம் இருந்து பெறப்படும் ஒரு கரும்பின் விலை ரூ.33- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படும்”என்றார் அவர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in