பாஜகவின் ‘வங்கப் பிரிவினை’ ஆயுதம்!

பலன் தருமா மம்தாவின் ஆவேச அஸ்திரம்?
 மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியைத் தனி மாநிலமாக அல்லது ஒன்றியப் பிரதேசமாகப் பிரிக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த சிலர் கூறியதைக் கண்டித்து மம்தா பானர்ஜி பேசியிருக்கும் ஆவேச வார்த்தைகள் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. கூடவே, இந்த விவகாரத்தில் நீடித்துவரும் பிரச்சினைகள் குறித்த கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

அண்மையில், மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மற்றும் ஜல்பாய்குரி மாவட்டங்களுக்குச் சென்றிருந்த மம்தா பானர்ஜிக்கு, தடைசெய்யப்பட்ட இயக்கமான காம்தாபூர் விடுதலை இயக்கத்தின் (கேஎல்ஓ) தலைவர் ஜீவன் சிங், வீடியோ மூலம் மிரட்டல் விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஜீவன் சிங் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட முகமூடி அணிந்த நபர், வடக்கு வங்கத்துக்கு மம்தா செல்வதை எதிர்ப்பதாகக் கூறினார். “கம்தாபூர் மாநிலத்துக்கான எங்கள் கோரிக்கையை எதிர்க்க வேண்டாம். யாராவது எங்களைத் தடுக்க முயன்றால், விளைவுகள் விபரீதமாக இருக்கும். ரத்தம் சிந்தும் நிலை உருவாகும்" என்று அந்த நபர் பேசியிருந்தார்.

அலிபுர்துவார் மாவட்டத்தில் மம்தா...
அலிபுர்துவார் மாவட்டத்தில் மம்தா...

இதுகுறித்து அலிபுர்துவாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “சிலர் என்னை மிரட்டுகிறார்கள், அவர்களுக்கு நான் பயப்படவில்லை. நீங்கள் என் மார்பில் துப்பாக்கியை வைத்து மிரட்டலாம், இருப்பினும் நான் ஒருங்கிணைந்த வங்காளத்துக்காகத் தொடர்ந்து போராடுவேன்” என்றார். மேலும், “இதெல்லாம் பாஜகவின் ஆதரவுடன்தான் நடக்கிறது. தேர்தல் வரும்போதெல்லாம் தனிமாநிலக் கோரிக்கையை பாஜக எழுப்புகிறது” என்ற மம்தா, “பாஜக சில சமயம் கூர்க்காலாந்து கோருகிறது. சில சமயம் தனி வடக்கு வங்கம் கோருகிறது. தேவைப்பட்டால் எனது ரத்தத்தைச் சிந்தவும் தயார். ஆனால், மாநிலத்தைப் பிரிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என ஆவேசம் காட்டினார்.

அதேசமயம், பாஜகவைச் சேர்ந்த சிலரின் இந்தக் கருத்து கட்சியின் அதிகாரபூர்வ கருத்து அல்ல என்று மாநில பாஜக விளக்கமளித்திருக்கிறது. “மேற்கு வங்கப் பிரிவினை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக சாத்தியமில்லை. தனி மாநிலத்துக்கு நாங்கள் ஆதரவாக இல்லை. ஆனால், வடக்கு வங்கத்தில் வளர்ச்சி தேவை என்று நினைக்கிறோம்” என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறியிருக்கிறார். எனினும், பாஜக எம்பி-க்களும், சமூக ஊடகங்களில் இயங்கும் பாஜக ஆதரவாளர்களும் தொடர்ந்து மாநிலப் பிரிவினைக்கு ஆதரவாகப் பல்வேறு வாதங்களை முன்வைத்துவருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் பாஜக ஆதரவாளர்கள், அந்தப் பகுதியில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் அது மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒன்றியப் பிரதேசமாக உருவாக்கப்பட வேண்டும் என்கின்றனர். அப்படிச் செய்வதன் மூலம் மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி அப்பகுதி மக்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லலாம் என்பது அவர்களின் வாதம். 1960-கள் முதலே வடக்குப் பகுதியில் தனிமாநிலக் கோரிக்கை எழத் தொடங்கிவிட்டது என்றாலும், பாஜக அதில் காட்டும் ஆர்வம் தற்போது பெரிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

காம்தாபூர் விடுதலை இயக்கம்
காம்தாபூர் விடுதலை இயக்கம்

திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து போன்ற வட கிழக்கு மாநிலங்களில் எழுந்த தனிமாநிலக் கோரிக்கையை, அது தொடர்பான போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் தணித்தது என்று சொல்லும் பாஜக அபிமானிகள், இன்னொரு புறம் அதே மாதிரியான கோரிக்கையை மேற்கு வங்கத்தில் எழுப்பும் இயக்கங்களின் குரல்களை எதிரொலிக்கின்றனர்.

சொல்லப்போனால், காம்தாபூர் விடுதலை இயக்கம் தனி மாநிலம் என்பதைத் தாண்டி, தனி நாடே வேண்டும் எனக் கோரிவந்த பிரிவினைவாத இயக்கம். மேற்கு வங்கத்திலிருந்து டார்ஜிலிங், கூச் பிஹார் உள்ளிட்ட சில பகுதிகள், அசாம், பிஹார் மாநிலங்களிலிருந்து சில பகுதிகள், அண்டை நாடான நேபாளத்திலிருந்து சில பகுதிகள் எனப் பிரித்து காம்தாபூர் எனும் தேசத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரி வன்முறைச் சம்பவங்களில் அந்த இயக்கம் ஈடுபட்டது. இப்போது அதன் கோரிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் வன்முறைப் பாதையிலிருந்து அது விலகவில்லை. அதன் தலைவர் ஜீவன் சிங் இன்னமும் தலைமறைவாகத் திரிகிறார்.

இவ்விவகாரத்தில் வேறு பல பிரச்சினைகளும் அலசப்படுகின்றன. மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் மேற்கு வங்கம் வழியாகவே வருகின்றனர் என்றும், இங்கு வந்த பின்னர் போலி ஆவணங்களைத் தயாரித்து அவர்கள் இந்தியக் குடிமக்கள் மத்தியில் ஐக்கியமாகிவிடுகின்றனர் என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். வாக்கு வங்கி அரசியலுக்காக திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இதை ஆதரிக்கின்றன என்றும் விமர்சிக்கின்றனர். இந்தப் பிரச்சினைகளைக் களைய டார்ஜிலிங், மால்டா, முர்ஷிதாபாத், சிலிகுரி, ஜல்பாய்குரி போன்றவற்றைப் பிரித்து ஒன்றியப் பிரதேசமாக்கிவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

வடக்கு வங்கத்தை பாஜக குறிவைக்க முக்கியக் காரணம், சமீபத்திய தேர்தல்களில் அப்பகுதியில் அக்கட்சிக்குக் கிடைத்த அபார வெற்றிதான். 2019 மக்களவைத் தேர்தலில் வடக்குப் பகுதியில் உள்ள 8 தொகுதிகளில் 7-ல் பாஜக வென்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 294 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. பாஜக 77 இடங்களில் வென்றது. குறிப்பாக, வடக்குப் பகுதியின் 8 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் 30-ஐ பாஜக கைப்பற்றியது. அது மம்தாவை ரொம்பவே காயப்படுத்திவிட்டது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து அப்பகுதி மக்களின் ஆதரவை பாஜக பெற்றுவிட்டதாக வெளிப்படையாகவே வேதனை தெரிவித்தார் மம்தா.

அந்த வெற்றி தந்த தெம்பில் ஜான் பர்லா, ஜெயந்தா ராய், ராஜு பிஸ்தா போன்ற எம்பி-க்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வடக்கு மேற்கு வங்கத்தைத் தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கோரிவந்தனர். அதேசமயம், வடக்குப் பகுதியில் பாஜகவின் வெற்றி தொடருமா என்பதை கூச் பிஹார் மாவட்டத்தில் உள்ள தின்ஹாட்டா தொகுதி இடைத்தேர்தல் சந்தேகத்துக்குள்ளாக்கியது. அந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் உதயன் குஹா 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவுக்கு டெபாசிட் பறிபோனது.

பாஜகவினர் மாநில பிரிவினையை வலியுறுத்திய பின்னர் நடந்த முதல் தேர்தலில் அக்கட்சிக்குத் தோல்விதான் கிட்டியது. மாநிலப் பிரிவினையை ஏற்க மாட்டோம் என உறுதியாக நின்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பிரம்மாண்ட வெற்றி கிடைத்தது. எனில், மக்கள் இவ்விஷயத்தில் பாஜகவை நம்பவில்லையா எனும் கேள்விகள் எழுந்தன.

பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் சிலைக்கு மாலையிடும் ஜே.பி.நட்டா...
பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் சிலைக்கு மாலையிடும் ஜே.பி.நட்டா...

இதற்கிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாஜகவின் பல முயற்சிகள் பிசுபிசுத்துவருகின்றன. அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயம் வெல்லும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நம்பிக்கையுடன் சொல்கிறார். ஆனால், பலர் பாஜகவிலிருந்து விலகி ‘தீதி’ கழகத்தில் ஐக்கியமாகி விட்டார்கள். இன்னும் பலரும் கட்சியைவிட்டு விலகத் தயாராகிவருகிறார்கள். இந்தச் சூழலில், பாஜக இவ்விஷயத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.

வடக்கு வங்கத்தில் இப்படியான எதிர்ப்புகளும் மம்தாவுக்குப் புதிதல்ல. 2017-ல் அவர் டார்ஜிலிங் சென்றிருந்தபோது, கோர்க்காலாந்து கோரி போராடும் அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்த முயன்றனர். அமைதியை நிலைநாட்ட ராணுவம் அழைக்கப்பட்டது. சகஜநிலை திரும்பும் வரையில் டார்ஜிலிங்கிலேயே முகாமிட்டிருந்தார் மம்தா. இந்த முறையும் தனது போர்க் குணத்தைக் காட்டி பாஜவுக்குச் சவால் விடுத்திருக்கிறார். ஆனால், அடுத்து பாஜக வகுக்கும் வியூகங்களை அவர் எதிர்கொள்ளும் விதத்தைப் பொறுத்தே திரிணமூல் காங்கிரஸின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in