பிச்சை எடுக்கும் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்: அதிகாலையில் காவல் நிலையம் எதிரே பரபரப்பு

பிச்சை எடுக்கும் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்: அதிகாலையில்  காவல் நிலையம் எதிரே பரபரப்பு

வேலூரில் பிச்சை எடுக்கும் பெண்ணிற்கு காவல் நிலையம் எதிரே பிரசவம் பார்த்த பெண் தலைமைக் காவலரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்தார். அப்போது காவல் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடை அருகே ஒரு பெண் அழுது கொண்டிருந்தார். இளவரசி அங்கு சென்று பார்த்த போது, 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண் பிரசவ வலியால் துடிப்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் அருகில் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையும் இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை காவலர் இளவரசி. உடனடியாக காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று அங்கிருந்த எஸ்ஐ பத்மநாபன், பெண் போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்துச் சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.

இதில் அந்த இளம் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இளம் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து இளம்பெண் கூறுகையில், " திருமணமான சில மாதங்களிலேயே கணவர் என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார். நான் பிச்சை எடுத்து தரவேண்டும் என எனது அண்ணன்கள் துன்புறுத்தினர். இதனால் இப்பகுதியில் பிச்சை எடுக்கிறேன் " என்று கூறி அழுதார்.

இதையடுத்து அவருக்கு ஆறுதல் கூறிய தலைமைக்காவலர் இளவரசி, பிறந்த குழந்தைக்கான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார். ஆதரவற்ற பெண்ணிற்கு தலைமைக்காவலர் இளவரசி உள்பட போலீஸார் பிரசவம் பார்க்க சம்பவம் வேலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் பாராட்டுக் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in