`எங்களுக்கு மதுபானம் வேண்டும்'; இரவில் அட்டகாசம் செய்த ரவுடிகள்: மிரட்டப்பட்ட போலீஸ்காரர்கள்

`எங்களுக்கு மதுபானம் வேண்டும்'; இரவில் அட்டகாசம் செய்த ரவுடிகள்: மிரட்டப்பட்ட போலீஸ்காரர்கள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் மதுபானக் கடை மூடிய பிறகு பாட்டில் கேட்டு தகராறு செய்த ரவுடிகள், இதுகுறித்து விசாரிக்கச் சென்ற போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் கக்கன் காலனி செல்லும் வழியில் உள்ள மதுபானக் கடையை அதன் ஊழியர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் மூடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திருவெறும்பூர் அருகேயுள்ள காந்தி நகர் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் விஷ்ணு, பிரவீன் ஆகிய இருவரும் தங்களுக்கு கடையை திறந்து மதுபானம் எடுத்து தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு கடை ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் விஷ்ணு, பிரவீன் இருவரும் அவர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து கடை விற்பனையாளர் இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவெறும்பூர் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவலர் வீரமணி ஆகியோர் இது குறித்து விசாரித்தனர்.

போதையில் இருந்த பிரவீன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் போலீஸாரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். பின்னர் அங்கு கூடிய பொதுமக்கள் பிரவீன் மற்றும் விஷ்ணுவை சரமாரியாக தாக்கியதோடு அவர்கள் இருவரையும் கட்டி வைத்தனர். இதில் காயமடைந்த இருவரையும் திருவெறும்பூர் போலீஸார் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் பிரவீன், விஷ்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

ரவுடிகள் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in