கேரளாவில் ரூ.34,000க்கு காவல் நிலையத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
காவல் நிலையத்துடன் போலீஸ் இன்ஸ்பெக்டர், மோப்ப நாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வசதிக்கான கட்டணப் பட்டியலையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு காவல் நிலையத்திற்கு ரூ.12,000, வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ.12,130, மோப்ப நாய்க்கு ரூ.7,280, காவல்துறை ஆய்வாளருக்கு ரூ.3,035 முதல் ரூ.3,340 வரை எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார்கள் மற்றும் படப்பிடிப்பு நடத்துவோர் காவல் நிலையங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அரசின் செலவைக் குறைக்கும் நடவடிக்கை இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. காவல்துறையின் இந்த முடிவுக்கு பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அரசின் நிதி நெருக்கடியை சரி செய்வதற்கான திட்டம் இது என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.