
தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளியைப் போலீஸார் சுற்றி வளைத்தபோது, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதனைத் தொடர்ந்து குற்றவாளியைப் போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தனக்கு சொந்தமான பைனான்ஸ் கம்பெனியில் இருந்தபோது வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் கடந்த 22 ஆம் தேதி, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஏற்கனவே 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்து இருந்தனர். இதுபோக தனிப்படை போலீஸார் மூன்றுபேரைக் கைது செய்தனர். இதில் முக்கியக்குற்றவாளியான ஜெயபிரகாஷை போலீஸார் தேடி வந்தனர். அவர் தட்டப்பாறை பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்தத் தகவலின்பேரில், போலீஸார் அவரை இன்று சுற்றி வளைத்தனர்.
அப்போது ஜெயபிரகாஷ் காவலர்களை அரிவாளால் வெட்டினார். இதில் எஸ்.ஐ ராஜபிரபு, காவலர் சுடலை மணி ஆகிய இருகாவலர்களுக்குக் கையில் வெட்டு விழுந்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் ஜெயபிரகாஷை முழங்காலுக்குக் கீழே சுட்டுப் பிடித்தனர். அரிவாள் வெட்டால் காயம்பட்ட காவலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுட்டுபிடிக்கப்பட்ட குற்றவாளி ஜெயப்பிரகாஷும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.