கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு; திருச்சியில் அதிரடி சோதனை: செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு; திருச்சியில்  அதிரடி சோதனை: செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்

கோவை சிலிண்டர்  குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம்  என்ற  சந்தேகத்தின் பேரில்  திருச்சியில்  பல இடங்களில் தமிழக போலீஸார் இன்று சோதனை நடத்தினர். 

கோவை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் விசாரணை(என்ஐஏ) வளையத்திற்குள் உள்ள நபர்கள் ஆகியோர்  தொடர்புடைய இடங்களில், தமிழக காவல்துறையினர் முன்கூட்டியே விசாரணை நடத்துவதுடன், அந்த இடங்களில் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில், திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் வசிக்கும் அப்துல் முத்தலிப் என்பவர் வீட்டில், திருச்சி கே.கே. நகர் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார், கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புடைய அவரது வீட்டில் வெடிபொருட்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது குறித்து, மோப்பநாய் ரூபி உதவியுடன், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் போலீஸார் சோதனை செய்தனர். தடயவியல் நிபுணர்கள், சைபர் கிரைம் போலீசார் என 25-க்கும் மேற்பட்டோர் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தீவிர  சோதனை நடத்தினர். 

சோதனையின் முடிவில், நான்கு சிம்கார்டுகள், ஒரு செல்போன் ஆகியவற்றை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். அப்துல் முத்தலீப்பிடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோல்  திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் எடமலைப்பட்டி புதூரில் வசிக்கும் ஜீபைர் அகமது  வீட்டிலும்,  எடமலைப்பட்டி புதூரில் உள்ள அவரது அறையிலும்  சோதனை நடைபெற்றது.மேலும் சீனிவாச நகர் கிழக்கு எடமலை பட்டிபுதூரிலும் ஒருவர் வீட்டில் போலீஸார்  சோதனை நடத்தினர். அங்கு எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in