பிரிந்து சென்ற மனைவியின் சகோதரிக்கு ஆபாச வீடியோ; கணவர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்: கடைசியில் நடந்த அதிரடி

ஆய்வாளர் சிவகுமார்
ஆய்வாளர் சிவகுமார்

பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய விவகாரம் தொடர்பாக பெண் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்த காரைக்கால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் ஹாஜா கமால் என்கிற கமாலுதீன் (வயது 46). இவரது மனைவி சலாமத் நாச்சியார் (30). இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சலாமத் நாச்சியார் கணவரை பிரிந்து மயிலாடுதுறையில் தனது மூத்த சகோதரி நர்கீஸ் பானு (40) என்பவருடன் வசித்து வருகிறார். அதனால் கமாலுதீன், ஹமீதா பானு (35) என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனாலும் சலாமத் நாச்சியாரை அடிக்கடி போன் மூலமாகவும் நேரில் சென்றும் தொந்தரவு செய்து வந்திருக்கிறார் கமாலுதீன்.

கடந்த சில நாட்களாக சலாமத் நாச்சியாரின் மூத்த சகோதரி நர்கீஸ் பானுவுக்கு செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் ஆபாச வீடியோக்களையும், அருவறுக்கத்தக்க வாசகங்களையும் கமாலுதீன் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நர்கீஸ் பானு கடந்த மாதம் 18-ம் தேதி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் சிவகுமார், கமாலுதீனை வரவழைத்து விசாரணை நடத்தினார். அதனைத்தொடர்ந்து வேறு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லையாம். இதையடுத்து நர்கீஸ் பானு தமிழக ஆளுநர், முதலமைச்சர், தேசிய மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையம், புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு புகார் அனுப்பினார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாவிடம் அறிவுறுத்தியது. அவரது உத்தரவின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புஷ்பலதா இது தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், மற்றும் கமாலுதீன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிவுறுத்தலின் புதுச்சேரி மாநில டி.ஜி.பி.மோகன்குமார் லால் உத்தரவின் பேரில் காரைக்கால் ஆய்வாளர் சிவக்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை காரைக்கால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in