5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை!

முருகேசன்
முருகேசன்

வழக்குப் பதியாமல் இருப்பதற்காக 5000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் கடந்த 2009-ம் ஆண்டில்  இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் முருகேசன். தற்போது திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது  அந்தப் பகுதியைச் சேர்ந்த முனியன் என்பவர் தான்  வேலை செய்த அரிசி ஆலை உரிமையாளர் செல்லையா என்பவர் மீது புகார் அளித்திருந்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட  இன்ஸ்பெக்டர் முருகேசன்,  இதில் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க செல்லையாவிடம் ரூபாய் 5000 லஞ்சம் கேட்டார். ஆனால் அதை கொடுக்க விரும்பாத செல்லையா இது குறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய நோட்டுகளை செல்லையா,  முருகேசனிடம்  கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். அதில் முருகேசனின் குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு  மூன்று ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த தீர்ப்பு திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in