கணவரை ஜாமீனில் எடுக்கிறோம்; நம்ப வைத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: சிக்கிய இன்ஸ்பெக்டர்

கணவரை ஜாமீனில் எடுக்கிறோம்; நம்ப வைத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: சிக்கிய இன்ஸ்பெக்டர்

கேரளத்தில் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கடலோர காவல்படை ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை சிலர் கூட்டுப்பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார். இந்த புகாரில் கோழிக்கோடு கடலோர காவல் படை ஆய்வாளர் பி.ஆர்.சுனு கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கொச்சி மாநகர காவல் ஆணையர் நாகராஜூ கூறுகையில், “எர்ணாக்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக மோசடி செய்து கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வர உதவுவதாக இன்ஸ்பெக்டர் சுனு தலைமையில் ஒரு குழுவினர் அவரது மனைவியிடம் பேச வீட்டிற்குச் சென்றுள்ளனர். அந்த குழுவில் பாதிரியார் ஒருவரும் இருந்துள்ளார். அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெற்ற இந்தக் கும்பல், கடந்த மே மாதம் அந்தப் பெண்ணை அவரது வீட்டில் வைத்து கூட்டுப் பாலியல் வன்மம் செய்திருக்கிறது.

தொடர்ந்து இருமாதங்களுக்குப்பின்பு வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றும் பாலியல் வன்மம் செய்துள்ளது. அந்தப் பெண் இப்போது கொடுத்த புகாரின் பேரிலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர் சுனு மீது ஏற்கெனவே ஒரு பாலியல் புகார் உள்ளது. அந்த வழக்கில் ஆறு மாதங்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, வேறு காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆய்வாளர் சுனுவைக் கைது செய்திருக்கிறோம். இவரோடு இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஆறு பேரிடம் விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in