போலீஸ் இன்பார்மர் கோடாலியால் வெட்டிக்கொலை: தகவல் சொன்னால் தண்டிக்கப்படுவீர்கள் என மாவோயிஸ்ட் எச்சரிக்கை

கோபால்.
கோபால்.

தங்களைப் பற்றி போலீஸாருக்குத் தகவல் சொன்னதாக ஒருவரை கோடாலியால் மாவோயிஸ்டுகள் வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது. அத்துடன் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக செயல்பட்டால் மற்றவர்களும் இதே விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கை கடிதத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் வெங்காபுரத்தை அடுத்த கோண்டாப்பூரைச் சேர்ந்தவர் கோபால்(55). பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது வாள், கோடாரிகளுடன் ஐந்து மாவோயிஸ்டுகள் அங்கு வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் கோபால் தப்பியோடி அருகில் உள்ள சகோதரர் வீட்டிற்குள் பதுங்கியுள்ளார். ஆனால், அந்த வீட்டிற்குள் நுழைந்து அவரை வெளியே இழுத்து வந்த மாவோயிஸ்டுகள் அவரது குடும்பத்தினர் கன் முன்பே கோபாலை கோடாலி மற்றும் வாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அப்போது ஒரு கடிதத்தையும் அவர்கள் விட்டுச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த கோபாலை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். கொலை செய்யப்பட்ட கோபாலுக்கு இரண்டு மனைவிகளும், ஐந்து குழந்தைகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த முலுகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கராம்சிங் ஜி பாட்டீல், மாவோயிஸ்டுகள் விட்டுச் சென்ற கடிதத்தைக் கைப்பற்றினார்.

மாவோயிஸ்டுகளின் கடிதம்.
மாவோயிஸ்டுகளின் கடிதம்.

இந்த கொலைக்கு தங்கள் பொறுப்பேற்பதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. அத்துடன் சிபிஐ மாவோயிஸ்ட்டின் வெங்கடாபுரம்-வாசேடு பகுதி கமிட்டியின் (விடபிள்யூஏசி) பெயரில் இருந்தது. அந்த கடிதத்தில், "கோபால் ஒரு போலீஸ் இன்பார்மர் என்றும், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக செயல்பட்டால் மற்றவர்களும் இதே விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் எச்சரித்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை போலீஸார் மறுத்துள்ளனர். கோபால் தங்களுக்கு எந்த தகவலையும் தரவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கோபாலின் இறுதிச்சடங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வெங்கடாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்டுகளால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் முலுகு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in