
லாக்கப் மரணங்களுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிதீவிரமாக சாட்டை சுழற்றிவருகிறார். அதேநேரத்தில் அதே விவகாரத்தால் காவலர்கள் உண்மையான குற்றவாளிகளையும் அடித்து விசாரிக்க முடியாமல் தவிக்கின்றனர். அதேபோல், குற்றவாளிகளைக் கையும், களவுமாகப் பிடிக்கும் பொதுமக்களுக்கும் இது மனரீதியாகச் சிக்கலைக் கொடுக்கின்றது.
சென்னையில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதான விக்னேஷ்(25) லாக்கப் மரணம் ஆனார். இதில் காவல்துறையினர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதேபோல் முன்பெல்லாம் இதுபோன்ற சம்பவங்களில் அந்த அந்தப் பகுதி டி.ஐ.ஜி தான் நடவடிக்கை எடுப்பார். அதிகபட்சமாக டி.ஜி.பி வரை செல்லும். ஆனால் இப்போது முதல்வரே நேரடியாக லாக்கப் மரணங்களுக்கு நடவடிக்கை எடுப்பதால் காவல்துறையினர் ரொம்பவும் பயந்து போயுள்ளனர்.
இது லாக்கப் மரணங்களுக்கு முடிவு கட்டும். இந்தவகை பயம் காவல்துறையினருக்குத் தேவைதான் என்றாலும் இது பொதுமக்களையும் ஒருவகையில் பாதித்துள்ளது. அதுகுறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சம்பவம் 1...
குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் இரு இளைஞர்கள் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டனர். அதை அப்பகுதிவாசிகள் பார்த்துவிட்டனர். இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, மின்கம்பத்திலும் கட்டிவைத்தனர். போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குற்றவாளிகளைக் காவல்நிலையம் அழைத்துச் செல்லும்முன்பு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டும் இல்லாமல் பிடிபட்ட திருடர்களிடம் இருந்தே புகார் பெறப்பட்டு கண்டால் தெரியும் பொதுமக்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், போலீஸார் நேரடியாக காவல்நிலையம் கொண்டு சென்று, ஏற்கெனவே பொதுமக்கள் தாக்கியவருக்கு ஏதும் அசம்பாவிதம் நடந்தால் முதல்வரின் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டுமே என்னும் அச்சமும் காரணமாக இருக்கிறது.
சம்பவம் 2..
நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் பைக்கைத் திருடி அந்த பைக்கிலேயே ஜாலி உலா வந்தவர் நிஜாம். அவரை நேற்று இரவு பிடித்து பொதுமக்கள் அடித்தனர். நிஜாம் மீது நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருந்தாலும், நிஜாமும் பொதுமக்கள் மீது புகார் சொல்லத் தொடங்கியுள்ளார். பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் குற்றவாளிகளை கைது செய்வதற்கு சமகால சாட்சியாக பொதுமக்களின் மீதான வழக்கு பதிவும் உருவாகி வருகிறது.
தமிழக முதல்வர் காவல்துறையினரின் தயக்கத்தை உடைப்பதோடு, பொதுமக்களுக்கும் குற்றவாளிகளைப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைக்கும் மனோதைரியத்தையும் உறுதி செய்யவேண்டும் என்பதே அனைத்துத்தரப்பினரின் எதிர்பார்ப்பு!