50 அடி உயர மரத்திலிருந்து தவறி விழுந்த போலீஸ்காரர்; முன்னாள் எம்பியின் பாதுகாவலருக்கு நேர்ந்த சோகம்!

லோகேஷ் பூஜாரி
லோகேஷ் பூஜாரி

முன்னாள் எம்பியின் பாதுகாவலராக இருந்த போலீஸ்காரர் ஒருவர், 50 அடி உயர மரத்திலிருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக மரணமடைந்தார்.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தின் பாஜக அரசியல் பிரபலமாக இருப்பவர் அப்பச்சு ரஞ்சன். இவர் சட்ட மன்றம் மற்றும் மக்களவை உறுப்பினராக பலமுறை மக்கள் சேவையாற்றி இருக்கிறார். முன்னாள் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் இவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் லோகேஷ் பூஜாரி என்ற 35 வயது காவலர், கடந்த சில வருடங்களாக அப்பச்சு ரஞ்சனுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை மா மரம் ஒன்றில் ஏறி, ஒட்டு முறைக்கான தோட்டக்கலைப் பணிகளை லோகேஷ் மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.

மரத்தின் 50 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்ததில் சுய நினைவின்றி கிடந்த லோகேஷ், உடனடியாக மடிகேரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே லோகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மரணமடைந்த லோகேஷ் பூஜாரிக்கு மணமாகி ஒரு பெண் குழந்தை உண்டு. லோகேஷ் மரணம் குறித்து முன்னாள் எம்பி அப்பச்சு வேதனை தெரிவித்திருக்கிறார். குடகு மாவட்டத்தில் 2018ம் ஆண்டு நிலச்சரிவின் போது லோகேஷ் மேற்கொண்ட மீட்பு பணிகள் குறித்தும், அவரது நேர்மையான பணித்திறன் குறித்தும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

லோகேஷ் மா மரத்திலிருந்து விழுந்த சம்பவம், அவரது தனிப்பட்ட இடத்தில் நேர்ந்ததா அல்லது அப்பச்சு ரஞ்சனுக்கு உரிய இடத்தில் நேர்ந்ததா என்ற தகவல் இன்னமும் வெளியாகவில்லை. லோகேஷ் பூஜாரியின் அகால மரணம் குறித்து குடகு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in