
திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் பெண் வாகன ஓட்டிகளுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினர்.
உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகத்திலும் மகளிர் தினக் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. அதன் ஒரு அங்கமாக திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் சாலையில் சென்ற பெண் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக அளித்தனர்.
நெல்லை மாநகர(கிழக்கு) துணைக் காவல் ஆணையர் சீனிவாசன் வாகன ஓட்டிகளுக்குத் திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். அப்போது அந்த வழியாக வந்த பெண்களில் சிலர் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். வழக்கமாக ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் காவலர்கள் இன்று பெண்கள் தினம் என்பதால் அவர்களுக்குத் திருக்குறள் புத்தகத்தை வழங்கியதோடு, ’இனிமேல் ஹெல்மெட் அணியாது டூவீலரில் பயணிக்க மாட்டேன்’ என கடிதமும் எழுதி வாங்கினர்.
மகளிர் தினத்திற்கு சாலையில் நின்று மகளிருக்கு திருக்குறள் புத்தகத்தை காவலர்கள் விநியோகித்தது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.