வாளால் வெட்டி தப்பிக்க முயன்ற ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்!

வாளால் வெட்டி தப்பிக்க முயன்ற ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்!

போலீஸை கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிக்க முயன்ற ரவுடியை காவல் துறையினர் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருமையூர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின்(28). இவர் மீது கொலை, கொலை முயற்சி, துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட  பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சோமமங்கலம் போலீஸார் இவரைத் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

நேற்று இரவு சாய்ராம் கல்லூரி வழியாக சச்சின் வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அவரைப் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது பாஸ்கர் என்ற காவலரைத் தோள்பட்டையில் வாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து, தனிப்படையினர் அவரை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சச்சின் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். உடனடியாக அவரை விரட்டிய காவலர்கள் வானத்தை நோக்கி எச்சரிக்கை செய்யும் விதமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதையும் மீறி சச்சின் ஓடியதால், அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். சச்சினின் காலில் இரண்டு குண்டுகள் பாய்ந்ததில் அவர் ஓட முடியாமல் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். ஆனால், அவருடன் வந்திருந்த பரத் என்பவர் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார்.

இதையடுத்து அவரை பிடித்த தனிப்படையினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு கத்திகள், திருட்டு இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. சச்சின் மீது உள்ள வழக்குகள் மற்றும் அவர் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in