குறைகளைச் சொல்லுங்கள்; அனுமதித்த காவல் துணை கண்காணிப்பாளர்: கொட்டித் தீர்த்த காவலர் குடும்பங்கள்!

பங்கு பெற்றவர்களுக்கு பரிசளித்து, உரையாற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்
பங்கு பெற்றவர்களுக்கு பரிசளித்து, உரையாற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்

காவலர் குடியிருப்பில் என்னன்ன பிரச்சினைகள் இருக்கிறது  சொல்லுங்கள் என்று கேட்ட காவல் அதிகாரியிடம் தங்கள் குடியிருப்பில் உள்ள குறைகளை தயங்காமல் எடுத்து வைத்திருக்கின்றனர் காவலர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்.

தமிழகத்தில் உள்ள காவலர்கள் குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின்  மன அழுத்தத்தை போக்கும் வகையில்  விளையாட்டு, பேச்சு போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி  அவரவர்கள் குடும்பத்துடன் பங்குபெறுவதால் குடியிருப்பில் உள்ள அனைவரிடமும் அன்புடன் நேசித்து பழகுவதோடு அவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சியும் ஏற்படும் என தமிழக சட்டம்- ஒழுங்கு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவித்திருந்தார்.

அதன்படி நெல்லிக்குப்பம்  கீழ்பட்டாம்பாக்கம் காவலர்கள் குடியிருப்பில் பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா  தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்  நேற்று இரவு நடைபெற்று பரிசுகளும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவிற்கு பிறகு பேசிய  காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர ஏதுவாக தமிழக அரசு 1 லட்சம் அறிவித்துள்ளதாகவும், காவலர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தரும் வகையில் உதவிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.  

அப்போது காவலர் குடியிருப்பில் வசிப்பவர்கள், தங்கள் குடியிருப்பைச் சுற்றி செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்திருப்பதால் கொசுத் தொல்லைகள் அதிகமாக இருப்பதுடன் விஷப்பாம்புகள் அடிக்கடி வீட்டிற்கு உள்ளே வந்து விடுகின்றன. அதனால் குழந்தைகளை வெளியேவிட பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

அடுத்தடுத்த பெண்கள்,   தங்களுக்கென்று தனியாக குழந்தைகள் விளையாட விளையாட்டுத் திடல் வேண்டும் எனவும், நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் குற்ற வழக்காக பதியப்பட்ட வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்க்கவே பயமாக உள்ளது. அதனால் அனைத்து வாகனங்களையும் அப்புறப்படுத்தி தரவேண்டும் எனவும்,  காவலர் குடியிருப்பில் எங்குமே தெரு மின்விளக்குகள்  இல்லை எனவும் அடுக்கடுக்காக தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

குறைகளைக் கேட்டுக் கொண்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர்,  அனைத்து பிரச்சினைகளும் நாளைமுதல் சரிசெய்யப்பட்டு வாழ்வாதாரமும் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டு உறுதி செய்யப்படும் என உறுதிபட தெரிவித்தார். இதனால் காவலர் குடியிருப்பில் உள்ளவர்கள் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in