பஞ்சாபில் கொள்ளையர்களுடன் நடந்த என்கவுன்டர் - போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை

பஞ்சாபில் கொள்ளையர்களுடன் நடந்த என்கவுன்டர் - போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை

பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் ஆயுதமேந்திய கொள்ளை கும்பலுடன் நடந்த என்கவுன்டரில் 28 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பக்வாரா ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அமந்தீப் நஹரின் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கான்ஸ்டபிள் குல்தீப் சிங் பஜ்வா, ஞாயிற்றுக்கிழமை இரவு பில்லூர் சப்-டிவிஷனுக்குட்பட்ட கங்ஜாகிர் கிராமத்தில் துப்பாக்கி முனையில் கார் ஒன்றினைக் கொள்ளையடித்த கும்பலைத் துரத்தியபோது இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தது.

கங்ஜாகிர் எஸ்பிஎஸ் நகரில் உள்ள ஒருவரிடமிருந்து நான்கு பேர் கொண்ட கும்பல் காரைப் பறித்துச் சென்றனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பக்வாரா மற்றும் கோரயா போலீசார் ஜிபிஎஸ் கருவி மூலம் கொள்ளையர்களை தேடத் தொடங்கினர். அவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்த பிறகு, ஒரு போலீஸ் குழு அவர்களை துரத்தியது. அப்போது, கொள்ளையர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில் பஜ்வாவின் தொடையில் ஒரு தோட்டா துளைத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸ் தரப்பு நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காலில் சுடப்பட்ட மூன்று கொள்ளையர்கள் பிடிபட்டனர் என்றும், மற்றொரு நபர் தப்பித்துச் சென்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பலிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 11 தோட்டாக்களை போலீஸார் மீட்டனர்.

தொடையில் காயம்பட்ட பஜ்வா பக்வாராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பஜ்வா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். அவர் அதிகளவில் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக பேசிய ஜலந்தர் ரேஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜி.எஸ்.சந்து, " இந்த சம்பவத்தில் தப்பியோடிய நான்காவது குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த வழக்கில் பில்லூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நான்கு பேரும் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர். இவர்கள் காரை திருடிய ஒரு மணிநேரத்தில், பக்வாரா சிட்டி காவல் நிலைய அதிகாரி அமந்தீப் நஹர் மற்றும் அவரது இரண்டு காவலர்கள், காரைத் துரத்திச் சென்று நிறுத்துமாறு உத்தரவிட்டனர். காரில் இருந்தவர்களை வெளியே வருமாறு காவல் நிலைய அதிகாரி உத்தரவிட்டதும், அவர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அடர்ந்த மூடுபனியால் அருகில் இருப்பவர்களையே பார்க்க இயலாத சூழல் இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்தனர்” என்று தெரிவித்தார்.

போலீஸ் கான்ஸ்டபிள் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “தியாகி கான்ஸ்டபிள் குல்தீப் சிங் பஜ்வா பெல்ட் எண். 886/KPT தனது கடமையின் போது உயிர் தியாகம் செய்துள்ளார். இதற்காக பஞ்சாப் அரசு 1 கோடி ரூபாய் கருணைத் தொகையை வழங்கும். மேலும் ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகையை ஹெச்டிஎஃப்சி வங்கி வழங்கும். நாங்கள் எங்கள் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in