கடும் குளிர் அலை - உத்தர பிரதேசத்தில் காவலர் உட்பட 4 பேர் மரணம்

கடும் குளிர் அலை - உத்தர பிரதேசத்தில் காவலர் உட்பட 4 பேர் மரணம்

கடந்த ஐந்து நாட்களாக வட இந்தியா முழுவதும் கடும் குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு காவலர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரகுநாத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சோன்கர் (38), பதேபூர் மாவட்டத்தின் காகா கோட்வாலி பகுதியில் உள்ள காவல் ரோந்து வாகனம் 1181-ல் பணியாற்றி வந்தார்.

அவர் நேற்று காலை, பணியில் இருந்தபோது, ​​அவருக்கு கடும் குளிர் காரணமாக திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன் பிறகு அவரது சக ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக ஹார்டோ சமூக சுகாதார மையத்தில் சேர்த்தனர். பின்னர், மருத்துவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அவர் உடல்நிலை மோசமடைந்து வழியிலேயே இறந்தார் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற ராம் சுமர், அனில் குமார், உதய்ராஜ் பாஸ்வான் ஆகிய 3 விவசாயிகள் குளிரின் காரணமாக உடல்நிலை மோசமடைந்து இறந்ததாக கூறப்படுகிறது.

குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழே 4.5 லிருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும்போது குளிர் அலை ஏற்படுகிறது. கடும் குளிர் காரணமாக டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. குளிர் அலையால் வட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in