போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு: திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அதிரடி சோதனை

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் 60 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 156 வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிறைவடையும் வரை இங்கு அடைக்கப்பட்டிருப்பார்கள். வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சிறப்பு முகாமில் மாநகர காவல் துணை ஆணையர்கள் மூவர் தலைமையில் இன்று காலை முதல் சுமார் 150 க்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போதைப் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஒவ்வொரு அறையாக போலீஸார் சோதனை நடத்தினர். போலீஸாரின் இந்த திடீர் சோதனைக்கு அங்குள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் மூவர் மரத்தின் மேல் ஏறி நின்று இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் போலீஸார் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அதிரடியாக செயல்பட்டு சோதனையை நிறைவு செய்தனர். இந்த சோதனையில் 60 செல்போன்கள், இரண்டு டேப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் சோதனை நடத்தினர்.

சிறப்பு முகாமில் உள்ளவர்கள் சிலர் தங்கள் அலைபேசி வழியாக போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு வைத்திருப்பது சோதனையின்போது தெரியவந்தது. இதனையடுத்து இங்கு உள்ளவர்கள் செல்போன் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர்கள் அனைவருமே செல்போன் வைத்திருந்தனர். எனவேதான் அவற்றை பறிமுதல் செய்வதற்காகவே இந்த அதிரடி ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in