இரு கிராமங்கள் மோதலுக்கு காரணமான கபடி போட்டி... 400 பேர் மீது வழக்கு பதிவு: பதற்றத்தால் அதிரடிப்படை குவிப்பு

மோதிக்கொண்ட கிராம மக்கள்
மோதிக்கொண்ட கிராம மக்கள்

ராமநாதபுரம் அருகே கபடி போட்டியில் ஏற்பட்ட பிரச்சினையில் இரு கிராமத்தினருக்கு இடையே அடுத்தடுத்து தொடர்ந்து கைகலப்பும், மோதலும் ஏற்பட்டுள்ளது‌. இந்நிலையில் இரு கிராமங்களைச் சேர்ந்த 400 பேர் மீது முதுகுளத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான கபடி போட்டி கடந்த ஜூலை 2-ம் தேதி நடைபெற்றது. விளங்குளத்தூரில் நடைபெற்ற இப்போட்டி ஒன்றில் கீழக்கன்னிசேரி கிராம அணி தோல்வி அடைந்தது. இதனால், விளங்குளத்தூர், கீழக்கன்னிச்சேரி கிராமத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, காவல்துறையினர் பேசி சமரசம் செய்து வைத்தனர்.

பிரச்சினையில் ஈடுபட்ட கிராம மக்கள்
பிரச்சினையில் ஈடுபட்ட கிராம மக்கள்

இந்நிலையில், விளங்குளத்தூரைச் சேர்ந்த கணேசன், அருண்குமார், தினேஷ் குமார் ஆகிய மூவர் முதுகுளத்துாருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது, மின்வாரிய அலுவலகம் அருகே கீழக்கன்னிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் கபடி போட்டியில் ஏற்பட்ட முன்பகையினால், ஐந்து பேரையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளனர். இதே போல், கீழக்கன்னிச்சேரியைச் சேர்ந்த பிரகாசம் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விளங்குளத்தூரை சேர்ந்த சிலர் அவரை தாக்கி உள்ளனர். இதனால் இரு கிராமத்தினருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.

மீண்டும், நேற்று காலை விளங்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மீண்டும் இரு கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக, விளங்குளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் இரு கிராமங்களைச் சேர்ந்த 400 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இரு கிராமங்களிலும் சிறப்பு அதிரடிப்படையினர் 200-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். இப்பிரச்சினையால் இரு கிராமங்களிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இச்சூழலில் இரு கிராம மக்களும் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in