மீனுக்கு வீசிய வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: மணலில் பதுக்கி வைத்து விற்க முயன்ற மீனவர் கைது

மணலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள்
மணலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள்

மீன்பிடி வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சாவை மணலில் பதுக்கி வைத்து விற்க முயன்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ய முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜெனதன் (40) என்ற மீனவரை பிடித்து இன்று விசாரித்தனர்.

விசாரணையில், ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள மணலில் ஜெனதன் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் ஜெனதனை கைது செய்தனர்.

பின்னர் அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கூடுதல் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 16-ம் தேதி ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கஞ்சா பொட்டலங்கள் தனது வலையில் சிக்கியதாகவும், சுமார் 30 கிலோ எடையுள்ள அவற்றை எடுத்து வந்து ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் விற்பனைக்கு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவின் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in