குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை: கோவையில் வலம்வரும் ஆட்டோ மினி நூலகம்!

கோவை  போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை: கோவையில் வலம்வரும் ஆட்டோ மினி நூலகம்!

கோவையில் தனியார் கல்லூரி உடன் இணைந்து ஆட்டோவில் மினி நூலக திட்டத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கிவைத்தார்.

கோவையில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் வகையில், கோவை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கோவையில் வீதி தோறும் நூலகம் மற்றும் ஆட்டோவில் மினி நூலகம் திட்டத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புத்தகங்களை நன்கொடை அளிக்க பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

நன்கொடை அளிக்கப்படும் புத்தகங்களை வீதிதோறும் நூலகம், ஆட்டோவில் மினி நூலகம் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோவை சிங்காநல்லூர் கரும்பு கடை மைதானத்தில் சி.எஸ்.ஆர் நிதி திட்டம் மூலம் தனியார் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல்துறையினர் சார்பில், 200 ஆட்டோவில் மினி நூலகம் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இதனை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மாநகர காவல்துறை சார்பில், பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காக ‘கம்யூனிட்டி ப்ளீச்சிங் அவுட் புரோகிராம்' நிறைய இடங்களில் நடத்தி கொண்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்களில் தெருவோர நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலை, மாலை வேலைகளில் குழந்தைகள் தங்களுடைய நேரங்களை பயனுள்ளதாக செலவிட்டு அதன் மூலம் மாற்று சிந்தனைகள் ஏற்படாமல் இருக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதைத்தொடர்ந்து கோவை மாநகரில் உள்ள ஆட்டோக்களில் தனியார் கல்லூரி உதவியுடன் ஆட்டோ நூலகம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ஆட்டோக்களில் புத்தகங்கள் வைத்துள்ளோம். பொதுமக்களுக்கு மட்டுமில்லாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முறையாக பயன்படுத்த முடியும். ஆட்டோ ஓட்டுநர்களுடன் போக்குவரத்து காவல்துறை பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். கண்டிப்பாக இது மனக்கவலையை குறைப்பதற்கும், மக்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் இளைஞர்கள், போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை அழைத்து முறையான போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in