‘லிஃப்ட்’ காத்திருப்பில் கண்ணாடி விரியன்; தாராபுரத்தில் களேபரமான உணவகம்

உணவகத்தில் பிடிபட்ட கண்ணாடி விரியன்
உணவகத்தில் பிடிபட்ட கண்ணாடி விரியன்

தாராபுரத்தின் பிரபல உணவகத்தில் லிஃப்டுக்காக காத்திருந்த நான்கடி நீள கண்ணாடி விரியன் பாம்பால், அவ்விடம் களேபரமானது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இயங்கி வரும் பிரபல உணவகங்களில் ஒன்று வெங்கடேஸ்வரா மெஸ். இங்கு லிஃப்ட் இயங்கும் பகுதியில், விஷ ஜந்துவான கண்ணாடிவிரியன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

இந்த உணவகத்தில் அனுதினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வது வழக்கம். அப்படி பரபரப்பு மிகுந்த இடத்தில் இன்று, நான்கடி நீள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. எதேச்சையாக பாம்பைக் கண்ட உணவக ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினார்கள்.

உணவகத்துக்கான பொருட்களை மேலும் கீழுமாக எடுத்துச் செல்லும் லிப்டில், எவர் கண்ணிலும் படாது கண்ணாடி விரியன் ஊடுருவி இருக்கிறது. எவரையும் தீண்டும் முன்னர் அது ஊழியர்கள் கண்ணில் பட்டதில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பதால், உணவகமும் அமளி துமளியானது. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சென்றதில், பாம்பு பிடிப்பதற்கான உரிய உபகரணங்களுடன் அவர்கள் விரைந்து வந்தனர். பாம்பு பதுங்கியிருந்த இடத்தில் அவர்கள் முதல்கட்டத் தேடலை தொடங்கினர்.

ஆளரவம் கேட்டதும் பதுங்கிக்கொண்ட பாம்பினை சற்று நேர பிரயத்தனத்துக்குப் பின்னரே தீயணைப்புத் துறையினர் உயிரோடு மீட்டனர். பின்னர் பிளாஸ்டிக் பை ஒன்றில் பாம்பை பிடித்துச் சென்றனர். காயம் ஏதுமின்றி பிடிபட்ட பாம்பு, உடனடியாக வனப்பகுதியில் விடப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர்.

இதற்கிடையே பிரபல உணவகத்தில் பாம்பு புகுந்ததில், இதர உணவகங்களின் நிலையும் தாராபுரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. பராமரிப்பு இல்லாதும், பாழடைந்த மற்றும் பயன்படுத்தப்படாத அறைகளோடும் இருக்கும் உணவகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடங்கள் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இங்கே வந்தடையும் எலி மற்றும் பெருச்சாளிகள், அவற்றைத் தேடி வரும் பாம்புகள் என அச்சத்துக்குரிய சூழல் நிலவுவதாகவும், உணவு பாதுகாப்பு துறையினர் அம்மாதிரியான இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in