தமிழையும், தமிழர்களையும் குழப்ப வேண்டாம்: ஆளுநருக்கு வைரமுத்து வேண்டுகோள்

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு பெயர் குறித்த வீண் சர்ச்சையில் ஈடுபட்டு தமிழையும், தமிழர்களையும் குழப்ப வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு  சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்தும், மலர்களைத் தூவியும் இன்று  மரியாதை செலுத்தினார்.  இதில் பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்று திருக்குறள் பாடல் பாடினார்.

அதனைத் தொடர்ந்து கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழர் திருநாளாகிய பொங்கலுக்கும், திருவள்ளுவருக்கும் ஒற்றுமை உள்ளது.  இருவரும் மதநம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல, உழைப்பு சார்ந்தது,  இயற்கை சார்ந்தது,  சூரியனையும், மண்ணையும், மாட்டையும் உழைப்பையும் மையப்படுத்துகிற திருநாள் பொங்கல் திருநாள்.

திருவள்ளுவரும் எந்த மதத்தையும்  சார்ந்த ஞானி அல்ல,  உலகத்தைச் சிந்தித்தார். உலக மனிதனைச் சிந்தித்தார். அரசியல் குறும்பு செய்யும் நண்பர்களுக்கு வேண்டுகோள், திருவள்ளுவருக்கு நிறமாற்றுகிறீர்கள், காவிச் சாயம் பூசுகிறீர்கள். இதனால் திருவள்ளுவர் மதம் மாறிவிடுவாரா? நெறி மற்றும் கொள்கை மாறி விடுவாரா? தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். 

திருவள்ளுவர் தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல,  உலகத்தில் வாழுகின்ற எல்லா மனிதர்களுக்கும் ஞானப் பரிசுத்தமாக விளங்குகிறார். எனவே,  திருவள்ளுவரை வணங்குவோம்"  என வைரமுத்து தெரிவித்தார்.

தொடர்ந்து ஆளுநரின் தமிழ்நாடு சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த கவிஞர் வைரமுத்து, " தமிழகம்,  தமிழ்நாடு என்று ஆளுநர் பேசுவது சர்ச்சை கிடையாது, அது அவருடைய கருத்து, அவர் சொல்லும் கருத்தை, தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாடு என்று சொல்லும் போது எங்களுக்கு கூடுதல் நயம் உள்ளது. அவர் சொல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது இந்தியாவின், தமிழ்நாட்டின் இன்றைய தேவையா? 
தமிழ்நாட்டின் பொருளாதாரம், கல்வி, ஆகியவற்றை உயர்த்துவதற்கு என்னென்ன வழிகள் உள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் போதைப் பழக்கத்திலிருந்து தமிழர்களை மீட்டெடுப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டு என்று சிந்திக்க வேண்டிய நேரத்தில் சொல்லாடலில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதை  புலவர்களிடம்  விட்டுவிடுங்கள். ஆளுநருக்கு வேறு வேலை இருக்கிறது என்று  கருதுகிறேன்.  அவர் வீண் சர்ச்சையில் ஈடுபட்டு தமிழையும் குழப்ப வேண்டாம்,  தமிழர்களையும் குழப்ப வேண்டாம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in