கவிஞர் செ.து.சஞ்சீவி காலமானார்: தமிழ் ஒளியின் வெளிச்சம் பரப்பியவர்

கவிஞர் செ.து.சஞ்சீவி
கவிஞர் செ.து.சஞ்சீவி

கவிஞர் தமிழ்ஒளி மறைவுக்குப் பின் அறுபது ஆண்டுகாலம் அவரது புகழ்பரப்பிவந்த கவிஞர் செ.து. சஞ்சீவி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94. 

17.10.1929ல் துரைசாமி - அங்கம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த சஞ்சீவி, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இளம்வயதிலேயே பெரியாரின் பேச்சாலும், கம்யூனிஸ்ட் தலைவர் கே. எஸ். பார்த்தசாரதியின் போர்க்குணத்தாலும் கவரப்பட்டார். தமிழ் மீதான ஆர்வத்தால் பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். அவர் வழியாக கவிஞர் தமிழ்ஒளியைக் கண்டடைந்த சஞ்சீவி, தமிழின் முதல் தலித் காவியம் என்று போற்றப்படும் வீராயி காவியத்தின் வீரிய கவிதை வரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

இதன் பின்னர் அமைந்தகரை பகுதியில் தாம் நடத்திவந்த கடைக்கு அழைத்துவந்து அவரிடம் தோழமை நட்பு பாராட்டினார். கவிஞர் தமிழ்ஒளியின் அகாலமரணம் சஞ்சீவியைப் பெரிதும் பாதித்தது. தமிழ்ஒளியை அவரது கவிதைகளால் வாழவைப்பது என்று தீர்மானித்த அவர், தமிழ்ஒளியின் நூல்களை தேடித்தேடி பதிப்பித்தார். டாக்டர் மு. வரதராசனார் , பன்மொழிப்புலவர் க. அப்பாதுரையார் ஆகியோரிடம் நூல்களுக்கு முன்னுரை பெற்று கவிஞரின் புலமையையும் இலக்கிய ஆளுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். 

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ஒளியின் பிறந்த நாள், நினைவு நாள் கூட்டங்களை தமுஎகச, கலை இலக்கிய பெருமன்றம், போன்றவற்றின் உதவியுடன் நடத்திவந்தார். புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ்ஒளியின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வழிவகுத்தார். தமிழ்ஒளி மீதான  ஈடுபாட்டை அங்கீகரிக்கும் விதமாக சாகித்திய அகாதமி அவரது வரலாற்றை சஞ்சீவியைக்கொண்டு எழுதவைத்தது. 

தமிழ்ஒளி நினைவாக சில பதிவுகள் என்ற கட்டுரை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.  தமிழ்ஒளி நூற்றாண்டுவிழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அவரது புகழ்ஒளி மங்காமல் காத்துவந்த செ. து. சஞ்சீவி இன்று காலமாகியுள்ளார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

இவர்களின் விருப்பப்படி சஞ்சீவியின் கண்கள் தானமாக வழங்கப் பட்டுள்ளன. சஞ்சீவியின் உடல், எண் 48, பிள்ளையார் கோயில் தெரு, (பச்சையப்பன் கல்லூரி அருகே) செனாய் நகர் சென்னை-30 என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாகச் கொண்டு செல்லப்பட்டு நுங்கம்பாக்கம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in