கூலிப்படையை ஏவி பாமக பிரமுகர் வெட்டிக்கொலை: பங்காளி சண்டையில் நடந்ததா என போலீஸ் விசாரணை!

ஆதித்யன்
ஆதித்யன்

விழுப்புரம் அருகே பாமக மாவட்ட துணைத்தலைவர் மர்ம நபர்களால்  வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன்.  இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட  துணைத் தலைவராக பொறுப்பில் இருந்தார். நேற்று வெளியே சென்று விட்டு இரவு  10 மணி அளவில் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பனையபுரத்திலிருந்து கப்பியாம்புலியூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த  அடையாளம் தெரியாத இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஆதித்யனை வழிமறித்து  கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாளால்  சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆதித்யன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இச்சம்பவத்தை அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தீவிர விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகளைப் பிடிக்க விழுப்புரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அனைத்து மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆதித்யனுக்கும், அவரது பங்காளி உறவு முறை கொண்ட நபர்கள் ஒருசிலருக்கும் நீண்ட நாட்களாக  பகை இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணத்தினாலேயே கூலிப்படையை ஏவி ஆதித்யன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸார்  சந்தேகிக்கின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in