
ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் அருகே அரசு குவாரியில் அளவுக்கதிமாக மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை பாமக முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.75 லட்சம் எக்டேர் விளைநிலம் உள்ளது. இதில் நடப்பாண்டில் 1.34 லட்சம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானம் பார்த்த பூமி என கூறப்படும் திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேர் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
பயிருக்கு தேவையான தண்ணீருக்கு இப்பகுதி விவசாயிகள் பாம்பாற்றை மட்டுமே பெரிதும் நம்பி உள்ளனர். பாம்பாற்றில் நிரம்பும் மழை நீரால் திருவாடனை தாலுகா நீர்வளம் பெருகி கண்மாய், குளங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஓரியூர் சிறுகம்பையூர் பகுதியில் மணல் குவாரி அமைத்து பாம்பாற்றில் கனிம வளத்துறையினர் அனுமதித்த அளவைவிட அதிக ஆழத்தில் ராட்சத இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது.
இதனால் நிலத்தடி நீர் அதலபாதாளம் சென்றுள்ளதால், இப்பகுதி விவசாயிகளின் ஒரு போக சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயிர் விளையும் கடைசி நேரத்தில் கண்மாய், குளங்களில் நீர் வற்றியதால் நெற்பயிர் என்பது கேள்விக்குறியாகி விடும் அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலம் கருதி அளவுக்கதிமாக மணல் எடுத்து வரும் குவாரிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமகவினர், ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
மாவட்ட செயலாளர் அக்கீம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அதிகாரிகள் சமரசம் பேசினர். இதையடுத்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். இதனால் ஆட்சியரக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.