அன்னையின் ஓவியம்: காரை நிறுத்தி இளம் பெண்ணைப் பாராட்டிய மோடி

அன்னையின் ஓவியம்: காரை நிறுத்தி இளம் பெண்ணைப் பாராட்டிய மோடி

இமாசல பிரதேச மாநிலத் தலைநகர் சிம்லாவுக்குச் சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு அவரது தாயாரின் ஓவியத்தைப் பரிசளித்துப் பாராட்டைப் பெற்றிருக்கிறார் ஓர் இளம் பெண்.

பிரதமராக 8-வது ஆண்டை நிறைவுசெய்திருக்கும் மோடி, அது தொடர்பான கொண்டாட்டங்களில் பங்கேற்கவும், அதையொட்டிய நலத் திட்டங்களைத் தொடங்கிவைக்கவும் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுவருகிறார். அந்த வகையில், ‘கரீப் கல்யாண் சம்மேளன்’ திட்டத்தைத் தொடங்கிவைக்க இமாசல பிரதேச மாநிலத் தலைநகர் சிம்லாவுக்கு இன்று சென்றிருக்கிறார்.

நிகழ்ச்சி நடைபெற்ற ரிட்ஜ் மைதானத்துக்குச் செல்லும் சாலையின் இருபுறத்திலும் பிரதமர் மோடியைப் பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்தினரின் மத்தியில் ஓர் இளம் பெண், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னின் உருவத்தை தத்ரூபமான ஓவியமாக வரைந்து வைத்திருந்தார். அதைக் கவனித்த மோடி காரை நிறுத்தச் சொல்லி, இறங்கி அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றார். அப்பெண்ணின் பெயர், வசிப்பிடம் குறித்து விசாரித்த மோடி, அந்த ஓவியத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆயின என்றும் கேட்டார்.

சிம்லாவைச் சேர்ந்த அனு எனும் அப்பெண், ஒரே நாளில் அந்த ஓவியத்தை வரைந்ததாகச் சொல்லி பிரதமரைப் பிரமிப்பில் ஆழ்த்தினார். பிரதமரின் உருவத்தை ஓவியமாக வரைந்து, துணை ஆணையர் அலுவலகம் மூலம் அவருக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறினார். அந்தப் பெண்ணைப் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். தலை மீது கைவைத்து ஆசீர்வாதம் தந்தது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in