21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களைச் சூட்டினார் பிரதமர் மோடி!

21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களைச் சூட்டினார் பிரதமர் மோடி!

இன்று நடைபெற்ற பராக்கிராம தின விழாவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று பராக்கிரம தினமாக மத்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் அந்தமான் நிக்கோபரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவில் கட்டப்பட உள்ள நேதாஜி தேசிய நினைவகத்தின் மாதிரியை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின்போது அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள 21 பெரிய தீவுகளுக்கு பிரதமர் மோடி பெயர் சூட்டினார். பெயரிடப்படாத மிகப்பெரிய தீவுக்கு, முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா பெயரிடப்பட்டது, அவர் நவம்பர் 3, 1947 அன்று ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகே பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களுடன் போரிட்டு தனது உயிரை இழந்தார். இந்த தீவுகளுக்கு மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் மற்றும் ஹானி கேப்டன் கரம் சிங், எம்எம் கேப்டன் ஜி.எஸ். சலாரியா; லெப்டினன்ட் கர்னல் தன் சிங் தாபா, அப்துல் ஹமீத், லெப்டினன்ட் கர்னல் அர்தேஷிர் புர்சோர்ஜி, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்ட 21 பேரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2021-ம் ஆண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23-ம் தேதியை பராக்கிரம தினமாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. மேலும், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் வைத்து, நேதாஜியின் நினைவை போற்றும் வகையில், 2018-ம் ஆண்டு தீவுக்கு சென்ற போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றப்பட்டது. அப்போது நீல் தீவு, ஷஹீத் த்வீப் எனவும், ஹேவ்லாக் தீவு, ஸ்வராஜ் த்வீப் என்றும் பெயர் மாற்றப்பட்டது.

"நாட்டின் உண்மையான ஹீரோக்களுக்கு உரிய மரியாதை அளிப்பதற்கு எப்போதுமே பிரதமரால் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த உணர்வோடு 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு 21 பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in