தொங்கு பால விபத்து: சம்பவ இடத்துக்கும் மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி!

தொங்கு பால விபத்து: சம்பவ இடத்துக்கும் மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி!

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்துவிழுந்து 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்துக்கு இன்று நேரில் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில், மச்சூ நகர் மீது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், புனரமைப்புப் பணிகளுக்காகச் சில மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. மோர்பி நகராட்சியால் நிர்வகிக்கப்படும் அந்தப் பாலத்தைப் பழுதுபார்க்கும் பணிக்கான ஒப்பந்தம் ஒரெவா குழும நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தப் பாலத்தை மீண்டும் திறப்பதற்கு இன்னும் 5 மாத காலம் அவகாசம் இருந்த நிலையில், குடிமைப் பணி அதிகாரிகளிடம் உரிய சான்றிதழ் பெறாமல் முன்கூட்டியே திறந்துவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாலத்தில் சென்றுவர 12 ரூபாய் முதல், 17 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பொழுதுபோக்குக்கான இடமாகக் கருதப்பட்ட அந்தப் பாலத்தில், கடந்த ஞாயிறு (அக்.30) அன்று தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டை ஒட்டி 400-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாலம் அறுந்து விழுந்தது. இதில் அந்தப் பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் மச்சூ நதியில் விழுந்தனர். பாறைப் பகுதிகள் நிறைந்த அந்த நதியில் விழுந்த 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரெவா நிறுவனத்தின் மேலாளர்கள், டிக்கெட் விநியோகித்தவர்கள், பாலம் பழுதுபார்க்கும் ஒப்பந்ததாரர்கள், காவலாளிகள் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன், பழைய, ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டுமானங்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நவம்பர் 14-ம் தேதி நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு இன்று சென்ற பிரதமர் மோடி, விபத்து நிகழ்ந்தது எப்படி என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மோர்பி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மச்சூ நதியிலிருந்து ஏற்கெனவே 170-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டனர். எனினும், ஆற்றி மூழ்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in