124 முறை மேஜை தட்டிய மோடி!

மேஜையை தட்டும் பிரதமர் மோடி
மேஜையை தட்டும் பிரதமர் மோடி

பட்ஜெட் தாக்கலும் அதுவுமாய், 2 நாட்களாய் புள்ளி விவரங்கள் தாங்கிய செய்திகளால் மக்கள் தாக்குண்டு இருக்கிறார்கள். நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது தனிப்பட்ட குடிமகனின் அன்றாடங்களோடு பின்னிப் பிணைந்தவை என்பதால் அவற்றை தவிர்க்கவும் முடியாது.

பல புள்ளிவிவரங்கள் தலையைச் சுற்றி மூக்கை தொடுபவை என்பதால், விளங்கும் வரை அவற்றை மெனக்கிட்டு ஆராய்ந்து சலிக்கவும் நேரிடும். அப்படி படு தீவிரமான புள்ளிவிவரங்களை எதிர்கொள்வோருக்கு, இந்த தகவல்கள் சுவாரசியமூட்டக் கூடும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்த 5 நிதிநிலை அறிக்கைகளில், இந்த முறைதான் மிகவும் விரைவாக வாசித்தது முடிந்த அறிக்கை. அதாவது 86 நிமிடங்களில் நிதிநிலை அறிக்கையை வாசித்து முடித்திருந்தார் நிர்மலா சீதாராமன். இதுவே அவரது கடந்த நிதிநிலை அறிக்கை வாசிப்பு 92 நிமிடங்களுக்கு நீடித்தது. அதற்கு முந்தைய 2021 பட்ஜெட் வாசிப்புக்கு நிர்மலா சீதாராமன் எடுத்துக்கொண்ட நிமிடங்கள் 110.

2020 பட்ஜெட் வாசிப்புக்கு மிகவும் கூடுதல் நேரமாக, 160 நிமிடங்கள் எடுத்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதுதான் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் நீண்ட வாசிப்பு சாதனைக்கு உரியது.

இவற்றுக்கு அப்பால், நிதியமைச்சர் அறிக்கையை வாசிக்க, முக்கியமான தருணங்களில் மேஜையை தட்டி வரவேற்பு நல்கிய மக்களவை உறுப்பினர்களில் பிரதமர் மோடி முக்கியமானவர். நிர்மலா சீதாராமனின் 86 நிமிட வாசிப்புக்கு, 124 முறை மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்திருக்கிறார் மோடி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in