மத்திய அரசின் ’பரிக்ஷா பேர் சாச்சா’ இயக்கத்தின் கீழ் கருத்து தெரிவித்ததற்காக கோவில்பட்டியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியைக்கு, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ள ’பரிக்ஷா பேர் சாச்சா’ இயக்கத்தில் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியை யசோதா, கல்வி மற்றும் மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
ஆசிரியை யசோதா தெரிவித்து இருந்த கருத்துக்களை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், ”நாட்டின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்து உங்கள் கருத்துக்கள் முக்கியமானவை. ஒரு மாணவனின் வாழ்க்கையில் வழிகாட்டியாக, கனவுகள் காண கற்றுக் கொடுத்து, அந்த கனவினை குறிக்கோளாக மாற்றி அவற்றை நிறைவேற்ற வைக்கும் ஆற்றல்மிக்கவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களிடையே நேர்மறை உணர்வையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி, வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்கள் வழிகாட்டுகிறார்கள்.
மாறி வரும் இன்றைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப்புகள் உள்ளிட்ட பல வாய்ப்புகள் இளைஞர்களுக்கும் உள்ளன.
மாணவர்களின் கனவுகளை நினைவாக்க ஊக்குவிப்பதிலும், அவர்களின் திறன்களை சிறப்பாக பயன்படுத்துவதிலும் இந்தியாவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும், ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல் தீர்க்கமானதாக இருக்கும். 2047ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நமது அமிர்த காலத்தில், நமது திறமை பெற்ற இளைஞர்கள் ஒரு புகழ் பெற்ற மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அடுத்த 25 ஆண்டுகளில் நமது ஆசிரியர்கள் இளைஞர்களின் இலக்குகளை நாட்டின் முன்னேற்றத்துடன் இணைக்க ஊக்குவிப்பார்கள் என நான் நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கும், ஒளிமயமான எதிர்காலத்திற்கும் வாழ்த்துக்கள்” என பிரதமர் மோடி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.