நமீபியாவிலிருந்து விமானத்தில் வந்த சிறுத்தைகள்: வனப்பகுதியில் விடுவித்தார் பிரதமர் மோடி!

நமீபியாவிலிருந்து விமானத்தில் வந்த சிறுத்தைகள்: வனப்பகுதியில் விடுவித்தார் பிரதமர் மோடி!

நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எட்டு சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில், ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எட்டு சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். இந்தியாவில் 1952 ல் ‘சீட்டா’ ரக சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வகை சிறுத்தைகளை, பிரதமர் மோடி தனது 72 வது பிறந்தநாளில் மீண்டும் இந்திய வனப்பகுதியில் உலவ விட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “பிரதமரின் பிறந்தநாளில், மத்திய பிரதேசத்துக்கு இதைவிட பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது. அழிந்துவிட்ட சீட்டாவை மீண்டும் அறிமுகம் செய்வது இந்த நூற்றாண்டில் வனவிலங்குகளுக்கு செய்யும் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது சுற்றுலாவை மேம்படுத்தும். பிரதமர் மோடிக்கு அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எட்டு சிறுத்தைகளில் ஐந்து பெண் சிறுத்தைகள் அடங்கும், அவை 2 முதல் 5 வயதுக்கு இடைப்பட்டவை ஆகும். மூன்று ஆண் சிறுத்தைகள் 4.5 முதல் 5.5 வயதுக்கு இடைப்பட்டவையாகும். சிறுத்தைகளை சுமந்துவந்த போயிங் 747-400 விமானம் இன்று காலை சுமார் 7:55 மணியளவில் குவாலியரில் தரையிறங்கிய பிறகு, அவை விமானப்படை ஹெலிகாப்டர்களில் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

குனோ தேசிய பூங்காவில் பிரதமர் சிறுத்தைகளை விடுவித்தது, இந்தியாவின் வனவிலங்குகள் மற்றும் அதன் வாழ்விடத்தை புத்துயிர் மற்றும் பன்முகப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in